அரசரடி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இறந்து கிடக்கும் பறவைகள்: திமுக கவுன்சிலர் புகாரால் மக்கள் அச்சம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அரசரடி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பல நாளாக பறவைகள் போன்ற உயிரினங்கள் இறந்து கிடப்பதாக திமுக கவுன்சிலரும், மாநகராட்சி அக்கட்சி கவுன்சிலர்கள் குழு தலைவருமான ஜெயராமன் தெரிவித்த குற்றச்சாட்டால், அப்பகுதி மக்கள் பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயராமன் கூறியது: "மதுரை அரசரடி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதன் மேல்தளங்கள் பல மாதங்களாக சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இந்த குடிநீர், மாநகர மக்களுக்கு மாநரகாட்சியால் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாளாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் செத்து கிடக்கின்றன.

தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் தங்கள் அலட்சியத்தால் கள்ளக்குறிச்சி போல் மதுரையிலும் பல உயிர்களை காவு வாங்கப்போகிறது. மாநகராட்சி நிர்வாகம், தங்கள் பணியை செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேயர், நேரடியாக ஆய்வு செய்து இடிந்து போய் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மேல் கான்கிரீன்டை சரி செய்ய வேண்டும். என ஜெயராமன் கூறியுள்ளார்.

திமுக கவுன்சில் ஜெயராமன் தெரிவித்த இந்த குற்றச்சாட்டால், அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் பெறும் பொதுமக்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி மேயர் இந்திராணி கூறுகையில், "இந்த தகவலை என்னிடம் முன்கூட்டியே தெரிவித்து இருந்தால், நானே நேரடியாக ஆய்வு செய்து சரி செய்து இருப்பனே, பரவாயில்லை. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE