மதுரை: லேஅவுட், கட்டிட அனுமதி, சான்றுகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், குடியிருப்புகளுக்கு அனுமதி பெற்ற கட்டிடங்களில் மருத்துவமனைகள் நடப்பதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள், நேற்று நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. துணை மேயர் நாகராஜன், ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பணியை பாராட்டி தமிழக மக்கள் திமுகவுக்கு 40க்கு 40 தொகுதிகளில் வெற்றியை கொடுத்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றும்படி, மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் தொடர்ந்து சிறப்பான மக்கள் பணியாற்ற வேண்டும்." என்றார்.
1வது மண்டலத் தலைவர் வாசுகி பேசுகையில், "6வது வார்டில் உள்ள உச்சபரம்புமேடு, நாகனாகுளம் போன்ற பகுதகிளில் தோராய பட்டா நிலங்களுக்கு ஆன்லைன் பட்டா இல்லாததால் பொட்டல் வரி, வீட்டுவரி போட முடியவில்லை. அதனால், மாநகராட்சியால் கட்டிட நிறைவு சான்றிழ் வழங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மின் இணைப்பு பெற முடியவில்லை. புதிய பாதாளசாக்கடை திட்டத்தை இன்னும் மண்டல-1 க்குட்பட்ட வார்டுகளில் முழுமையாக முடிக்காமலே சென்றுவிட்டனர். பல வார்டுகளில் இன்னும் சேம்பரே போடவில்லை." என்றார்.
திமுக கவுன்சிலர் துரைபாண்டியன் பேசுகையில், "மாநகராட்சி கூட்டம் அழைப்பு கடிதமும், தீர்மானம் காப்பியும் எனக்கு இதுவரை வரவில்லை. நானே தகவல் அறிந்து கூட்டத்திற்கு வந்துள்ளேன். பிறகு எப்படி நான் நிறைவேற்றப்போகும் தீர்மானங்களை பற்றி விவாதிக்க முடியும்." என்றார். உடனே ஆணையாளர் தினேஷ்குமார், போன் செய்து கூட அழைக்கவில்லையா? என்று கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். அவர்கள் கவுன்சிலர் துரைபாண்டியன் கையெழுத்து பெற்று வாங்கியதாக அதற்கான ஆவணங்களை காட்டினர்.
» பயிற்சி முகாமில் ஆசிரியைகளை பயிற்சியாளர் இழிவாக பேசியதாக காஞ்சிபுரத்தில் கண்டன போராட்டம்
» சென்னையில் ஜூன் 30-ல் உண்ணாவிரதம்: நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் முடிவு
அதிர்ச்சியடைந்த துரை பாண்டியன், "இது என்னோட கையெழுத்தே இல்லை, மாநகராட்சி ஊழியர்கள், நேரில் வந்து கொடுக்க சோம்பல்பட்டு, என்னோட கையேழுத்தை போலியாக போட்டுள்ளனர்." என்றார். அதற்கு ஆணையாளர், "விசாரித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
2வது மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி பேசுகையில், "விரைவில் பருவமழை வரப்போகிறது. இன்னும் மழைநீர் கால்வாய்களை தூர்வாரவில்லை. முன்கூட்டியே கண்டறிந்து கால்வாய்களை உடையும் பகுதிகளை சரி செய்தால் மட்டுமே பருவமழை நாம் எதிர்கொள்ள முடியும்." என்றார். அதற்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், "16 மழைநீர் கால்வாய்கள் ரூ.84 கோடியில் விரைவில் பராமரிக்கப்பட உள்ளது." என்றார்.
5வது மண்டலத் தலைவர் சுவிதா பேசுகையில், "சாலைகளில் ஒரு புறமும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளும், மற்றொரு புறம் மின்சாரத்துறை குழிதோண்டி வயர்களை பதிக்கும் பணியும் நடக்கிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். விரைவல் மழை வரப்போகிறது, தோண்டிய குழிகளில் மழைநீர் தேங்கி விபத்துகள் ஏற்படும்." என்றார்.
அதிமுக கவுன்சிலர் முத்துமாரி பேசுகையில், "தெருவிளக்குகள் எரிவதில்லை. வயர்கள் அறுந்து பழுதடைந்துள்ளது. அதை சரிசெய்வதற்கு மாநகராட்சியில் நிதி ஒதுக்குவில்லை. பொதுமக்கள் வசூல் செய்து சரி செய்கிறார்கள்." என்றார்.
மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா பேசுகையில், "கட்டிடங்களுக்கு மாநகராட்சி ஆணையாளருக்கே தெரியாமல் விதிமுறைகளை மீறி நகரமைப்பு நிலைக்குழுவினர் தன்னிச்சயைாக முறைகேடாக ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கி உள்ளனர். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று மாடி கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வாங்கிவிட்டு 5 மாடி கட்டியுள்ளனர். குடியிருப்புகளுக்கு கட்டிடம் கட்டி, அதில் மருத்துவமனை நடத்தப்படுகிறது. இந்த முறைகேடுகள் பற்றி தெரிந்தும், பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியும் மாநகராட்சி நடவடிக்கைஎடுக்கவில்லை. இதனை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும்." என்றார். அதற்கு மாநகராட்சி தினேஷ்குமார், "விசாரணை நடக்கிறது." என்றார்.
திமுக கவுன்சிலர் நாகநாதன் பேசுகையில், "67வது வார்டில் விடுப்பட்டுள்ள 8 கி.மீ., பகுதகளுக்கு பாதாள சாக்கடை இல்லை. ஆனால், பாதாள சாக்கடை வரி வசூல் செய்யப்படுகிறது. தெருவிளக்கு இல்லை. எப்போது இந்த வசதிகளை செய்து கொடுப்பீர்கள். தேனி மெயின் சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் பணியால் மாநகராட்சியின் ஒட்டுமொத்த சாலை, குடிநீர், பாதாளசாக்கடை கட்டமைப்பும் உடைந்து போய் விட்டது. நான் குடியிருக்கும் சம்பட்டிபுரம் சாலையில் கழிவு நீர் பொங்கி ஒடுகிறது. தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலைத் துறையிடம் மாநகராட்சி ஒத்துப்போகிறது.
மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி நேரடியாக ஆய்வு செய்து தனி மனை ஒப்புதல் வழங்குகிறதா?. கட்டிட வரைப்பட அனுமதி பெறும்போது லைசென்ஸ் இன்ஜினியர் மூலமாக ஒரு குறிப்பிட்ட தொகை ரொக்கமாக அல்லது ஜிபே மூலம் பொதுமக்களிடம் பெறப்படுகிறது. மாநராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு போலி ரசீது தயார் செய்து கட்டிட வரைப்பட அனுமதி வாங்கிய லைசென்ஸ் இன்ஜினியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் லைசென்சை ரத்து செய்யுங்கள்." என்றார்.
மாநகராட்சி நகரமைப்பு குழுவுக்கு தடை: திமுக கவுன்சிலர் நாகநாதன் பேசுகையில், "நகரமைப்பு நிலைக்குழு அனுமதியில்லாமல் லேஅவுட் அனுமதி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைக்குழு ஒப்புதல் இல்லாமல் எப்படி நேரடியாக தீர்மானம் கொண்டு வரலாம். இது தவறான முன் உதாரணமாகிவிடும். இது சட்டப்படி செல்லாது. நீதிமன்றம் அவமதிப்பு ஏற்படும். ஆணையாளர் விளக்கம் அளிக்க வேண்டும்." என்றார்.
அதற்கு மாநரகாட்சி ஆணையாளர், "நகரமைப்பு நிலைக்குழு கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் விசாரணை நடக்கிறது. அதனால், தற்காலிகமாக நகரமைப்பு நிலைக்குழு செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிலைக்குழு ஒப்புதல் இல்லாமலே தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது." என்றார்.
4 ஆண்டாக தூய்மைப் பணியாளருக்கு சீருடை இல்லை: திமுக கவுன்சிலர் ஜெயராமன் பேசுகையில், "கடந்த 4 ஆண்டுடாக தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. தையல் கூலியும் வழங்கவில்லை. நாம் சுகாதாரமாக இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். ஆனால், தமிழக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, உபகரணங்கள் கூட மாநகராட்சி வழங்குவதில்லை" என்றார். அதற்கு ஆணையாளர், "4 ஆண்டுகளுக்கும் சேர்த்து அவர்களுக்கு சீருடை, தையல் கூலி அடுத்த கூட்டம் நடப்பதற்குள் வழங்கப்படும்" என்றார்.