திருச்சி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பொது விநியோகத்தை பலப்படுத்த பொது விநியோகத்தில் உள்ள குறைபாட்டினை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் 12 (3) ஒப்பந்தத்தின் படி 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரத் தன்மையுடைய பணியிடங்களை வெட்டிச் சுருக்கும் நிகழ்வை கைவிட வேண்டும்.
நவீன அரிசி ஆலைகளை நவீனப் படுத்தவும், காலியாக உள்ள ஆபரேட்டர், டெக்னீசியன் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2023-ம் ஆண்டு உதவியாளரிலிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். மண்டலங்களிடையே பணியிடை மாற்றம் மேற்கொள்ளும் போது பணி மூப்பு அடிப்படையிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணி மாற்றம் வழங்க வேண்டும்.
விழிப்பு பணிக்குழுவில் நீண்ட காலமாக பணிபுரியும் களப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை விதிகளின்படி இருக்கை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஜூலை 1 முதல் 16ம் தேதி வரை மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரம் இயக்கத்தை நடத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
» கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாடம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை
» கோவை - அவிநாசி சாலையில் உயர்மட்ட பாலம் பணிகள் தீவிரம்: போக்குவரத்து மாற்றம்
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் லூர்துசாமி, சுப்புராஜ், சண்முகம், மோகன், ராஜாங்கம், ராசப்பன், கதிரேச பாண்டியன், பாலசுப்ரமணியம் மற்றும் மண்டல செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.