சென்னை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாஜக அரசு 3 -வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுமுதல் முறையாக கூடிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரை சிறப்புக்குரியது. 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற ‘லக்பதி தீதி’ திட்டம் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.
முக்கியமாக புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்த அறிவிப்பு மக்களின் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொண்டவையாக இருக் கும். தேர்வு முறைகேடுகளை தவிர்க்கும் விதமான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவரின் உரையின் மூலம், வளமான, வலிமையான, பாதுகாப்பான இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கை மக்களுக்கு அளிக்கப்பட் டுள்ளது.
மின் கட்டணத்தை குறைக்கும் சோலார் பேனல் திட்டம், புதியமருத்துவக் கல்லூரிகள், சிறியநகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதி, தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள், தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகள் என பல அறிவிப்புகள் உரையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.