விழுப்புரம்: வன்னியர் சமூகத்தினருக்கு உள்இடஒதுக்கீடு கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
வன்னியர் சமூகம் இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் பெறுவதை திமுக விரும்பவில்லை. இடஒதுக்கீடு வழங்காததற்கு திமுக சொல்லும் காரணம் சரியானதல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, அதற்கான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் மாபெரும்போராட்டம் நடத்தப்படும்.
‘சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி, எந்த ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் புள்ளிவிவரக் கணக்கெடுப்பின் மூலம்முழுமையான விவரங்களைத் திரட்ட முடியும். பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள்எடுத்த சாதிவாரி கணக்கெடுப்புசெல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, பொருந்தாத காரணங்களைக் கூறுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும். பிஹார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் தவறு என்றுசொல்லவில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது, பாமக எம்எல்ஏக்கள் உரிமைமீறல் பிரச்சினையைக் கொண்டுவருவார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம்.
மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த தலைமுறைக்கு 1972-ல்மதுவை அறிமுகம் செய்தது திமுகதான். எனவே, தமிழகத்தில் முழுமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது, இருமாநில உறவைக் கெடுக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. சட்டப்பேரவையை 100 நாட்கள் நடத்த வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்த கூட்டத்தில் நேரடி ஒளிபரப்புசெய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.