கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்: முதல்வர் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 63 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுவிலக்கு அமல் பிரிவு டிஜிபி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல் நிகழ்வாகவிவாதம் நடத்த வேண்டும் எனஅதிமுகவினர் ஒவ்வொரு நாளும்அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்தனர். நேற்று முன்தினமும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இத்தொடர் முழுவதும்பேரவையில் பங்கேற்காத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய திமுக அரசைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைக்மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் தனியாகவும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனியாகவும் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், மாலை 5 மணிக்கு பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். இந்த போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்று, ஆளும் அரசுக்கு எதிராக நடத்தும் முதல் உண்ணாவிரதப் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு: அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று, உண்ணாவிரத போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் ஆசியுடன் பழனிசாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதம் வெற்றிபெற வேண்டும். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினையை அதிமுகவினர் பேச வாய்ப்பளிக்காத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார்.

பதவி விலக வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தில் பேச அனுமதி இல்லாத நிலையில், பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து எனதுதலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டப்பேரவையில் முயன்றும், திமுக முதல்வர் தயங்குவது ஏன்? கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களைச் சந்திக்காதது ஏன்? கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன்,செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சீமான் ஆதரவு: இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக எம்எல்ஏக்களை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயலை மாறாமல் பின்பற்றும் திமுக அரசை எதிர்த்து சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவையும் தெரிவிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE