கும்பகோணம் | ரூ.69 கோடியில் புதிய பாதாளச் சாக்கடை குழாய்கள் மாற்ற திட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை குழாய்களை ரூ.69 கோடி செலவில் மாற்றியமைக்க திட்டம் தயாராகி வருகிறது.

கும்பகோணம்-தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள ஹாஜியார் தெரு பகுதியில் சாலைேக்கு அடியில் செல்லும் பாதாளச் சாக்கடை குழாயில் 2 தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள சேதமடைந்த பழைய குழாய்களை அகற்றி விட்டு, புதிய குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று அந்தப் பணிகளை பார்வையிட்ட கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ, “கும்பகோணம் மாநகராட்சியில் கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழாய்கள் தற்போது சேதமடைந்ததால் பல்வேறு இடங்களில் குழாய் உடைந்து வருகிறது. அவை உடனுக்குடன் சீர்செய்யப்பட்டும் வருகிறது.

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் பாணாதுறை கழிவு நீர் உந்து நிலையம் முதல் கரிக்குளம் வரை முதற்கட்டமாக 4 கி.மீ. தூரத்திற்கு பாதாளச் சாக்கடை குழாய் பழுதடைந்துள்ளது. அதனை சீர்செய்யும் பணிகள் ரூ.11 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதேபோல் மாநகராட்சி முழுவதும் உள்ள பழைய பாதாளச் சாக்கடை குழாய்களை அகற்றிவிட்டு, ரூ.58 கோடி மதிப்பில் சிமெண்ட், இரும்பு கலவையால் ஆன குழாய்களை பதிக்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி வந்தவுடன் புதிய பாதாளச் சாக்கடை குழாய்கள் மாநகர் முழுக்க பதிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவுக்கு வந்தால் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அந்தக் குழாய்கள் சேதமடையாது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE