நெல்லுக்கான ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு விவசாயிகள் அதிருப்தி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தமிழக அரசு அறிவித்துள்ள காரீப் பருவ நெல்லுக்கான ஊக்கத்தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு அண்மையில் காரீப் 2024-25-ம் பருவத்துக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாகச் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 என்றும், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு, 2024-25 காரீப் கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130-ம் எனக் கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,405-ம், சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,450-க்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் எனவும் தற்போது அறிவித்துள்ள ஊக்கத்தொகை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், “தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. சட்டப்பேரவை தேர்தலின் போது, குவிண்டால் ஒன்றுக்கு ரூ, 2,500 வழங்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் வென்று ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிப்பதாகும்.

தமிழக முதல்வர், நெல்லுக்கு அடுத்தாண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரது ஆட்சி முடியும் தருவாயில் வழங்குவதற்கு வழங்காமலேயே இருக்கலாம். மேலும், மத்திய அரசு அடுத்த காரீப் பருவத்தின் போது, ரூ.100 கூடுதலாக அறிவித்தால், ரூ.2,500 ஆகிவிடும். எனவே, தமிழக முதல்வர், விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்தாண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ, 3,100- வழங்கி விட்டார்கள். இதன் மூலம் 24 லட்சம் விவசாயிகள் அங்கு பயன்பெற்றுள்ளனர். ஏற்கெனவே 47 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நெல் கொள்முதலை தற்போது 1 கோடியே 47 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தி உள்ளனர். இதற்கு காரணம், அந்த அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச நியாயமான தொகையாகும்.

இதேபோல் குவிண்டால் நெல் ஒன்றுக்கு ரூ. 3,100 விலை வழங்குவோம் எனத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள ஒடிசா முதல்வரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இதேபோல் தேர்தல் சமயத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக விவசாயிகள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

கொள்முதல் விலை குறைப்பால் கடந்தாண்டு தமிழகத்தின் உணவு உற்பத்தி 17 லட்சம் மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து, தமிழக அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதேபோல், நிகழாண்டு உணவு உற்பத்தி மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, நெல்லுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE