தபால்காரர் போல செயல்படுகிறார் ஆளுநர்!: சொல்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்

By கி.பார்த்திபன்

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அனுப்ப வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தினக் கொடியேற்ற விழா, கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மே 6-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு தரும் போராட்டம் நடத்தப்படும். கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை தனி நபர் மீது செலுத்தி ரூ. 8 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.

எனவே, கூடுதல் வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்ய ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். நீட் விவகாரத்தில் ஆளுநர் தபால்காரர் போலவே செயல்படுகிறார். எனவே, காலம் தாழ்த்தாமல் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், "தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலை மற்றும் நூற்பாலைகளில் சிறுவர்கள் வேலை செய்வதைத் தடுக்க வேண்டும். கொத்தடிமைகள் பணியமர்த்துவதைத் தடுக்க மாநில அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE