“நெருக்கடிநிலை அறிவித்த இந்திரா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்களே எதிர்த்தனர்” - அண்ணாமலை

By KU BUREAU

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெருமைகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடும் எதிர்ப்பு: இந்திரா காந்தியை பிரதமர் பொறுப்பில் அமர வைத்தது பெருந்தலைவர் காமராஜர். பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், கட்சியிலிருந்து நீக்கியதும் காமராஜர்தான், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

நெருக்கடி நிலையை அறிவிக்கும் முன்னரே, நமது நாட்டை நெருக்கடி நிலையில்தான் இந்திரா காந்தி வைத்திருந்தார். அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே அவரைக் கடுமையாக எதிர்த்தனர்.

மாநில அரசுகள் கலைப்பு: நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளைக் கலைத்ததும், அதில் இன்றைய காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக அரசும் ஒன்று என்பதையும் அவர் மறந்துவிட்டார்.

சஞ்சய் காந்தியின் கார் நிறுவனத்துக்குக் கடன் வழங்குவதற்காகவே, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை மாற்ற வசதியாக, தனக்கு வேண்டப்பட்டவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்த வரலாறு கொண்டது காங்கிரஸ் கட்சி.

அரசியல் சாசனத்தையே திருத்திய காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும், இன்று அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவோம் என்று கூறித் திரிவதைவிட நகைமுரண் வேறு இருக்க முடியுமா?

வரலாற்றை மாற்ற முடியாது: நேரு மட்டுமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு எழுதி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன என்பது எப்படி தெரியும்?

தேர்தலில் தோற்றபின் வெளிநாட்டுக்கு தன் குடும்பத்தாருடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை. உங்கள் வசதிக்கு அரசியல் சாசனத்தை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது என்பதை செல்வப்பெருந்தகைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE