வரலாற்று திரிபு வாதங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்: அண்ணாமலைக்கு காங். தலைவர் கண்டனம்

By KU BUREAU

சென்னை: வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றது நாட்டுமக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை முதன்முறையாக ராகுல் காந்தி பெற்றுள்ளார். இது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். அவரது நியமனத்தை தமிழ்நாடு வரவேற்று மகிழ்கிறது.

நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் ஆட்சியாளர்களுக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் ஜனநாயகத்தை உலகத்துக்கு நிரூபித்தார்.

எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பாஜக அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE