நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் தர்ணா

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: தொடர்ந்து நகராட்சி முறைகேடுகளை எழுப்பியதால் தனது கடையை காலி செய்யும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டம் நகராட்சி தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜீதா பர்வீன் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் ரெங்கராஜ் வரவேற்றார். தீர்மானம் வாசிக்கத் தொடங்கி, தீர்மானம் 5-ல் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு 20-வது வார்டு பாஜக கவுன்சிலர் குமார் கூறியதாவது, "உள்நோக்கத்தோடு எனது கடை அகற்றப்படுகிறது, எனவே நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன்" எனக்கூறி, நகராட்சி தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு 15 நிமிடங்களில் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாஜக கவுன்சிலர் குமாரும் தர்ணாவை கைவிட்டு வெளியில் சென்றார்.

இன்றைய கூட்டத்தில் ரூ. 18 லட்சம் மதிப்பில் நகராட்சியில் 3 மாதங்களுக்கு தனியார் ஒப்பந்த அடிப்படையில் பாதாளச் சாக்கடை பராமரிப்பு செய்தல், தொழில்வரி உயர்த்துதல், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்துதல், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, கவுன்சிலர் குமாரின் கடையை ரயில் நிலைய சாலையில் இருந்து அகற்றிவிட்டு
அதற்குப் பதிலாக அவருக்கு வேறு இடம் ஒதுக்குவது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குப் பின் பாஜக கவுன்சிலர் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தனி ஒரு ஆளாக நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள், அவலங்கள், மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து நகர்மன்றக் கூட்டங்களிலும், நகராட்சி அதிகாரிகளிடமும் எழுப்பி வருகிறேன். இன்று நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களில் கூட முறைகேடுகள் உள்ளன.

இதனால் பழிவாங்கும் நோக்கில் பழைய பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் சாலையில் 1958ம் ஆண்டு முதல் தனது தந்தையால் நடத்தப்பட்டு தற்போது தன்னால் நடத்தப்பட்டு வரும் கடையை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது எனக் கூறி காலி செய்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.” என சவுன்சிலர் குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE