காளையார்கோவிலில் வாட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து அதிமுக, திமுக கவுன்சிலர்கள் கூட்டாக தர்ணா

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: காளையார்கோவிலில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றியத் தலைவர் தலைமையில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ராஜாவும் உள்ளனர். இங்கு 8 திமுக கவுன்சிலர்கள் உள்பட மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா ராணி (வளர்ச்சி), பழனியம்மாள் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்தாய் வாழ்த்து முடிந்தவுடன், ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசிடம் இருந்து போதிய நிதி பெற்றுத்தராத வட்டார வளர்ச்சி அலுவலர் உமா ராணியை கண்டித்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் 17 கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து தலைவரும் துணைத் தலைவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொது நிதியில் இருந்த ரூ.87 லட்சத்தை மஸ்தூர் பணியாளர்கள் ஊதியம், வாகனங்களுக்கு டீசல் உள்ளிட்ட நிர்வாக செலவினங்களுக்கே செலவழித்துவிட்டனர்.

வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. அதிகாரிகளே முடிவு செய்து பணத்தை செலவழித்து விட்டால், கவுன்சில் எதற்கு? வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்ய முடியாததால் வார்டுகளுக்குள் எங்களால் செல்ல முடியவில்லை" என்று கூறினர். அதே சமயம், இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உமாராணி கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE