பழநியில் காட்டு யானைகள் வருகையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் அச்சம்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பாலாறு பொருந்தலாறு அணைப் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளின் வருகை சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. அதேசமயம், இந்த யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்துவிடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி வனப்பகுதியில் காட்டு மாடு, மான், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவைத் தேடி இடம் பெயர்வது வழக்கம். பழநியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தினமும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து யானைகள், காட்டு மாடுகள், மான்கள் இப்போது கூட்டம் கூட்டமாக வருகின்றன.

தற்போது 15-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் அங்கு முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யானைகளை பார்ப்பதற்காக கொடைக்கானல் மலைச்சாலை 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மாலையில் ஏராளமானோர் குவிகின்றனர். அவர்கள் யானைகளை பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

பழநி அடுத்துள்ள ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டியில் கொய்யா, மக்காச்சோளம், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இக்கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருப்பதால் காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஆயக்குடி, சட்டப்பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட யானைகளை ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது யானைகள் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை எந்நேரம் வேண்டுமானாலும் விளை நிலங்களுக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, ''மழை பெய்து வருவதால் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகிறது. அதனால் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியிலேயே கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இருப்பினும் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE