இடைத்தேர்தலில் வேட்பமனு நிராகரிப்பு: மின் கோபுரம் மீதேறி ஓய்வுபெற்ற ஓட்டுநர் போராட்டம்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, திருச்சி கன்டோன்மென்ட் ஜல்லிக்கட்டு சாலையில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி, ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் ராஜேந்திரன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு சமூக செயல்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தபோது 10 ரூபாய் நாணயங்களை டெபாசிட் ஆக செலுத்தினார். தேர்தலில் 675 வாக்குகள் பெற்றார். இதே போல் இவர் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளாராக போட்டியிட மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து ராஜேந்திரன் இன்று காலை திருச்சி நீதிமன்றம், எம்ஜிஆர் சிலை அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, கன்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் அங்கு வந்து அவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

இதனிடையே, அந்த இடத்தில் பொதுமக்கள் கூடியதால் எம்ஜிஆர் சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல் துறை, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.

இதையடுத்து, அவரது இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. கன்ட்டோன்மென்ட் போலீஸார் ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE