தாம்பரம்: சேலையூர் காவல் நிலையம் அருகே பஞ்சுக் கடை, பேக்கரி, உணவகம் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சம்பலாகின.
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பேக்கரி மற்றும் உணவகம் இயங்கி வருகிறது. இதன் அருகே பஞ்சு கடை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை பஞ்சு கடையின் அருகே வெல்டிங் வேலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
வெல்டிங் வேலை செய்தபோது அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி பஞ்சுக் கடையில் இருந்த பஞ்சில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஞ்சுக் கடை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளியில் ஓடிவந்து உயிர் தப்பினர்.
பஞ்சுக் கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி அருகில் இருந்த பேக்கரி மற்றும் உணவகமும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 கடைகளிலும் ஏற்பட்ட தீயை சில மணி நேரம் போராடி அணைத்தனர்.
» ‘இந்தியன் 2’ ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும்! - இயக்குநர் ஷங்கர் நம்பிக்கை
» இலங்கை கடற்படையால் நாகை மீனவர் 10 பேர் சிறைபிடிப்பு: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் 3 கடைகளிலும் சேர்த்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன