பேரவையில் அமளி; அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு நடவடிக்கை

By KU BUREAU

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் 3-வது நாளாக நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவை நடவடிக்கையில் பங்கேற்க தடைவிதித்து நேற்றுஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. ஜூன் 21-ம் தேதி கேள்விநேரத்துக்கு முன்னதாக, கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுகவினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச்சியாக நேற்று பேரவையில் கேள்வி நேரத்தை தொடங்கியதும், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுத்த நிலையில், கோஷமிட்டதுடன் முற்றுகையிட்டனர். சில உறுப்பினர்கள் பேரவைதலைவர் இருக்கை அருகில் தரையில் அமர்ந்தனர்.

அப்போது பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசும்போது, அவைக்கு மாண்பு உள்ளது. ஜனநாயகத்தை காப்பதுடன் அவையை மதிக்க வேண்டும். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட நிலையில் இருந்தனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இப்படி நடந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அவையில் இருக்க வேண்டும் என்ற என் கோரிக்கையை பரிசீலனை செய்து அவர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதித்தீர்கள். ஆனால், அதன்பின்பும் மீண்டும் மீண்டும் இந்த அவையில் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இப்படி ஒரு காரியத்தை செய்கின்றனர்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக கூறியுள்ளேன். எனவே, பேரவைத் தலைவராகிய நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதையடுத்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘‘அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த அவர்களை கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அமைச்சர் கூறியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டத்தொடர் முழுமைக்கும் வேண்டாம். இன்று (ஜூன் 25) ஒரு நாள் மடடும் சஸ்பெண்ட் செய்து, மற்ற நாட்கள் அவைக்கு வர உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, முதல்வர் தெரிவித்ததை தீர்மானமாக முன்மொழிவதாக அமைச்சர் கே.என்.நேரு. தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒரு நாள் மட்டும் அதிமுகவினரை பேரவை நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கி வைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE