நாடாளுமன்ற ஹைலைட்ஸ் முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பதவியேற்பு: 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, பர்த்ருஹரி பஹதாப் மக்களவைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சமஸ்கிருதம், இந்தி, டோக்ரி, பெங்காலி, அசாமிஸ், ஒடியா மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவர் பதவி ஏற்க வரும்போது ஒரு பக்கம் "ஜெய் ஸ்ரீராம்" பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய வேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து அரசியலமைப்பு புத்தகத்தை உயர்த்தி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடியா மொழியில் பதவியேற்றார். அவர் பதவியேற்க வரும்போது எதிர்க்கட்சிகள் நீட், நீட் என முழங்கினர். சமீபத்தில் எழுந்த நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவ்வாறு முழக்கம் எழுப்பினர்.

இடைக்கால சபாநாயகர் தேர்வு: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்றும் அரசியல் சாசனம் வாழ்க என்றும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை: 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, “நமது அரசியலமைப்பின் மாண்பை நிலைநிறுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும், பாரதத்தின் ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஜூன் மாதம் 25-ம் தேதி மறக்க முடியாத நாள். இந்திய ஜனநாயகத்தில் ஓர் இருண்ட அத்தியாயம் எழுதப்பட்டதுடன் 50-ம் ஆண்டு தொடங்குகின்றது.

அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆன இந்த நிலையில், நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பெருமையுடன் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது” என்றார்.

மேலும், “எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சாமானிய மக்கள் அவையில் விவாதத்தையும், விடாமுயற்சியையும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் கோபம், நாடகம் மற்றும் தொந்தரவு ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பொருளைத் தேடுகிறார்கள். கோஷங்களை அல்ல” என்றார்.

மோடிக்கு கார்கே பதிலடி: மோடியின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தெளிவான தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் அவரிடம் ஆணவம் அப்படியே இருக்கிறது. நீட் மற்றும் பிற தகுதித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது குறித்து இளைஞர்களிடம் அவர் வருத்தம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வினாத்தாள் கசிவு எனும் அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி மற்றும் ஊழல் குறித்து அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை.

மோடி... நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால்தான் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிரானது. இருந்த போதிலும் அவர் பிரதமராகி விட்டதால், அதற்கான பணிகளை அவர் ஆற்ற வேண்டும்.

மக்களுக்குத் தேவை வாழ்வாதாரம்தான், கோஷங்கள் அல்ல என்று கூறி இருக்கிறீர்கள். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள். ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளும் இண்டியா கூட்டணியும் விரும்புறது. நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று தெரிவித்துள்ளார்.

‘சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் விளக்கம்: சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்.

ஏற்கெனவே, பிஹார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு என்று சொன்னால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். எனவே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து எடுக்க வலியுறுத்தும் விதமாக இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவர உள்ளோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து இந்தப் பிரச்சினையை ஜி கே மணி பேசும்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கும் மாநில அரசு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்சினைகள் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை பேச அனுமதிக்காததால் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

‘2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. ஊரக சாலைகள்’: முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் கஞ்சா போதை விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்” என்று அவர் கூறினார்.

மேலும், “ஒரே இடத்தில் 28 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பெரும்புள்ளிகள் என்பதால், காவல்து றையால், ஒரு நபர் ஆணையத்தால் விசாரணை நடத்தி நீதி கிடைக்காது. எனவேதான் சிபிஐ மூலம் விசாரணை நடத்தக் கோருகிறோம். அப்போதுதான் நீதி நிலைாட்டப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்கும்” என்றார்.

அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளச் சாராயம் விற்பனையில் பாஜக, அதிமுகவினருக்கு தொடர்புள்ளது என்று தகவல் வருகிறது. நிர்மலா சீதாராமனுக்கு வரலாறு தெரியவில்லை. திமுக மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக நிர்மலா சீதாராமன் பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவு இல்லை பிஜு ஜனதா தளம்: "நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே" என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE