கோவையில் மெத்தனால், எத்தனால் பரிவர்த்தனையை கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தில் மெத்தனால், எத்தனால் பரிவர்த்தனை மற்றும் அவற்றை கொண்டு செல்லும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து பேசும் போது, "மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் திடீர் சோதனைகள் மூலம் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மெத்தனால், எத்தனால் பரிவர்த்தனை மற்றும் அவற்றை கொண்டு செல்லும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது கிராமத்தில் கள்ளச்சாராய நடமாட்டத்தை கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து வருவாய்த்துறை, காவல்துறை உணவுப் பாதுகாப்புத் துறை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே ஆய்வு மேற்கொண்டு, போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என ஆட்சியர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத் குமார் ஜெயின், மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சட்ட விரோதமாக மது விற்பனை, வெளிமாநில மது வகைகளை கடத்தி விற்பனை செய்தல், கள்ளசாராயம் காய்ச்சுதல், கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு 76049 10581 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 10581 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE