கள்ளக்குறிச்சி சம்பவம்: காஞ்சிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 57 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் அதிமுக சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜா பாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட ஜெ. பேரவைச் செயலர் கே.யு.எஸ். சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள், பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் ரெட்டை மண்டலம் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொழில் பிரிவு அணியினர்.

கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதேபோல் காஞ்சிபுரம் ரெட்டை மண்டலம் சிக்னல் அருகே காஞ்சிபுரம் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில் திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. தொழில் நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் கௌதம் தலைமை தாங்கினார். இந்தச் சாலை மறியல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE