அரசுக்கு எதிராக தடையை மீறி உண்ணாவிரதம்: திருச்சியில் விவசாய சங்க தலைவர் கைது

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த திருச்சியில் விவசாய சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமையில், போலீஸாரின் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, போதை மருந்து, லாட்டரி சீட்டு விற்பனையை, தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், இதற்கு நீதி விசாரணை நடத்த கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிபடி ஆண்டுக்கு 500 மதுபான கடைகளை அடைப்பதை மறந்து விட்டு, நவீன பார் வசதி உடன் கூடிய எஃப்.எல் 2 மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளை புதிதாக திறப்பதை கைவிட வேண்டும்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தடை மீறி உண்ணாவிரதம் இருந்த ம.ப.சின்னதுரை.

கள்ளச் சாராய விற்பனையின் பின்புலத்தில், கப்பம் வாங்கிக் கொண்டு ஊருக்கு ஊர், காவல்துறையை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் முழு மதுவிலக்கை அமல்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து, மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை அழித்து சாலைகள் போடுவதையும், சூரிய மின் உற்பத்தி மையம் அமைப்பதையும் கைவிடும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 யை உடனடியாக கைவிடவேண்டும்.

மின்னல் தாக்கி, மின்சாரம் தாக்கி, பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, கழிவறை விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நாட்டு மக்களின் வாழ்வுரிமை போராட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும்.

தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த சின்னதுரையை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தேசிய நதிநீர் பங்கீட்டு சட்டம், உலக நதிநீர் பங்கீட்டு சட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்திட தமிழக விவசாயிகளை பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்திய ம.ப.சின்னத்துரையை கன்ட்டோன்மென்ட் காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE