போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு அவசியம்: கமல்ஹாசன் வலியுறுத்தல் @ கள்ளக்குறிச்சி

By KU BUREAU

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுவது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து, நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) நேரு மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

தொடர்ந்து, கருணாபுரம் பகுதிக்குச் சென்ற கமல்ஹாசன், கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த பெற்றோரின் 3 குழந்தைகள் மற்றும்உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களிடையே அவர் பேசும்போது, “எந்த அரசாங்கம் வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கள்ளச்சாராயத்தை அரசு கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், நாம் தான்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். குழந்தைகளின் கல்விக்கு என்னால்முடிந்த உதவிகளை செய்வேன்” என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வோர் மதுக்கடைக்கு அருகிலும் அரசு சார்பில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலான ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகள் அருகிலேயே விழிப்புணர்வுப் பதாகைகளை வைத்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கள்ளச் சாராய சாவுபோன்ற சம்பவங்களை அரசாங்கத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. மதுவுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து, விழிப்புணர்வு இயக்கமாக செயல்பட வேண்டும்” என்றார்.

சிபிஐ விசாரணை தேவை: இதேபோல, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று சந்தித்து நலம்விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள்தான் உயிரிழப்புக்கு காரணம். அவர்கள் காவல் துறையினரை செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். இனியாவது கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே தூத்துக்குடி சம்பவத்துக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதேபோல, கள்ளச் சாராய சம்பவத்துக்காக அமைக்கப்பட்ட ஆணையம் அளிக்கும் அறிக்கை மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. உண்மை வெளிவர வேண்டுமெனில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE