குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுத் துறைகளுக்கு துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், வனவர், பல்வேறு துறைகளுக்கான உதவியாளர்கள் என மொத்தம் 61 வகையான பணிகளில் காலியாக உள்ள 2,327 இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்திருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் பல பணிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குரூப் 2, 2ஏ பணிகளுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓராண்டு பணிக்காலம் இருக்கும் வகையில் 59 வயது வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அறிவிக்கப்பட்ட 13 பணிகளில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், வனவர், நன்னடத்தை அலுவலர் ஆகிய பணிகளுக்கு அதிகபட்ச வயது 37 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள 2,327 பணியிடங்களில் 446 பணியிடங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திடீரென வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் 37 வயதை கடந்த எவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சமூகநீதிக்கு எதிரானது. கடந்த 2022-ல் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையில், எந்த பணிக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. 2 ஆண்டுகள் கழித்து அறிவிக்கப்பட்டிருக்கும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையில் புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்?

சமூகநீதி சார்ந்த இந்த விஷயத்தில் கொள்கை முடிவை அரசு எடுத்ததா அல்லது அதிகாரிகள் எடுத்தார்களா என்பது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளிக்க வேண்டும். குரூப் 2, 2ஏ பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கும் முடிவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திரும்பப் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பு குறித்த விவரங்களுடன் தெளிவான அறிவிக்கையை புதிதாக வெளியிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE