விஜய்க்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து: நலத்திட்டங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்

By KU BUREAU

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர்நடிகர் விஜய் நேற்று தனது 50-வதுபிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

நடிகர் விஜய்-யின் பிறந்தநாளையொட்டி தவெக நிர்வாகிகள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், தங்க தேர் இழுத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் கொண்டாடினர். சென்னையில் வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் அந்தந்தப் பகுதி நிர்வாகிகள்பங்கேற்றனர். மேலும், பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வேண்டுகிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் மாற்று அரசியல் உருவாக, சமூகப் பொறுப்புடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்திருக்கும் விஜய்யின் கலை மற்றும் அரசியல் பணிகள் சிறப்புற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொதுப் பணியில் காலூன்றி உள்ள நடிகர் விஜய் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி வெற்றிகொள்ள முனைந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

விசிக தலைவர் திருமாவளவன்: பிறந்தநாள் காணும் அன்பு இளவல் தவெக நிறுவனர் நடிகர் விஜய்க்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: அன்பு தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் பூரண உடல் நலத்துடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இதேபோல், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE