கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஜ விசாரணை தேவை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதுவரை கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 183 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. ஆனால் அரசோமெத்தன போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசு இவ்விவகாரத்தில் வேகமாக செயல்பட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். அதேபோல கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெறுபவர்களுக்கு ஃபோமெபிசோல் (FOMEPIZOLE) எனப்படும் விஷமுறிவு மருந்து பெரிதும் பயன்படும்என்றும், ஆனால் மருத்துவமனைகளில் அவை இல்லை என்றும் கூறியிருந்தேன்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் நான் கூறிய ஃபோமெபிசோல் விஷமுறிவு ஊசிக்கு பதிலாக ஓமிப்ரசோல் (OMEPRAZOLE) எனும் அல்சருக்கு பயன்படுத்தப்படும் மருந்து குறித்து பேசியிருக்கிறார். ஃபோமெபிசோல் ஊசிஅவர்களுக்கு எங்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இது தடைசெய்யப்பட்ட மருந்து அல்ல. எனவே இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு யார் காரணம், அரசாங்கம்தான். அந்த மாவட்டத்தின் ஆட்சியர் 3 பேர் இறந்தவுடனே உண்மையை சொல்லியிருந்தால் இன்றைக்கு பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். எனவே சுகாதாரத்துறை அமைச்சர் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக வந்தார்கள் என்று சொல்வது பச்சை பொய்யாகும். இது அரசின் கையாலாகதனத்தை வெளிப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்து முதல்வருக்கும், டிஜிபிக்கும் தெரியாது என திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். பின் எதற்கு முதல்வர், டிஜிபி. அப்பகுதி காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனையை செய்திருக்க முடியாது.

மேலும் இச்சம்பவத்தில் திமுககவுன்சிலர்கள் 2 பேருக்கும், திமுக மாவட்டச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவ்விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE