தஞ்சாவூர்: நீரின் மகத்துவத்தை அறியாமல் அதனை அழிக்க துவங்கிவிட்டோம் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வேதனையடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் கிராமத்தில், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினரின் (கைஃபா), 200 ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி நிறைவு செய்தல் விழாவும், அதனைத் தொடர்ந்து 1,000 வது நீர் நிலைகள் சீரமைப்பு துவக்க விழாவும் இன்று மாலை (ஜூன் 22 ம் தேதி) நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை கைஃபா செயலாளர் கோ.பிரபாகரன் வரவேற்றார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும், நீதியரசருமான வி.பாரதிதாசன் தலைமை வகித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரா.சுரேஷ்குமார், பி.புகழேந்தி, கே.கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில், கைஃபா அமைப்பினருக்கு, நீதிபதிகள் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து, புதுடெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வாழ்த்துறை வழங்கி பேசியதாவது: நீரின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் பண்டைய தமிழர்கள். அதை நாம் இழந்துவிட்டோம். சிந்து சமவெளி முதல் கொடுமணல் வரை மனிதனின் வாழ்க்கை, நீரை முன்னிறுத்தியே அமைந்து இருந்தது. நீரின் மகத்துவத்தை அறியாமல் அதனை அழிக்க துவங்கிவிட்டோம். ஆகையால் தான் நாம், இப்போது நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்.
» கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் 400 பேர் கைது
» கள்ளக்குறிச்சி விவகாரம்: கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 153 பேர் கைது
ஆறுகள் இருந்த தண்ணீர் கிணறுகள், குழாய்கள், கேன்கள் வரை வந்துவிட்டது. வருங்காலத்தில் மாத்திரையாக தண்ணீர் அருந்தும் நிலை கூட வரலாம். புதுடெல்லியில் குடிநீருக்கு அடித்துக்கொள்ளுகிறார்கள். இதை பார்த்து கூட நாம் பாடத்தை கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழிதடங்களை அழித்து கட்டிடம் கட்டி விட்டோம். சுற்றுப்புற சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது. போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்து கொண்டே இருப்பதால் மண்ணில் பிடிப்பு தன்மை இல்லாமல் கட்டிடங்கள் இடிந்து விடும் நிலை ஏற்படுகிறது.
ஒரு மருத்துவமனை, பள்ளிகூடம், கோயில் கட்டுவதை விட ஒரு குளத்தை தூர்வாருவது புனிதமான செயலாகும். எனவே, நீர்மேலாண்மையை முறையாக நாம் கையாள வேண்டும் என்றார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது: கிராமங்களில் கூட இன்றைக்கு கேன் தண்ணீரை குடித்து வருகிறோம். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. விவசாயிகள் இல்லை என்றால் கிராமங்கள் இல்லை. விவசாயத்துக்கு அடிப்படை தேவை நீர் ஆதாரம். நீர் ஆதாரத்தின் மகத்துவத்தை நாம் உணரவில்லை.
கைஃபா அமைப்பினர் பல்வேறு குளங்களை தூர்வாரியதால் கடைமடை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டு திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை தூர்வார இந்த அமைப்பினர் பயன்படுத்தியுள்ளனர். இது இளைஞர்களால் துவங்கப்பட்டு மக்கள் இயக்கமாக மாறியது. இந்த 200-வது நீர்நிலை, 2,000-வது நீர்நிலையாக உயர வேண்டும். இளைஞர்களை ஆக்க சக்தியாக நாம் பயன்படுத்தினால் அவர்களை எந்தளவுக்கு கொண்டு வர முடியும் என்பதற்கு இந்த கைஃபா அமைப்பினர் ஒரு உதாரணம்.
அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த விவசாயிகள் செய்கிறார்கள் என்றால், இது அரசுக்கு அவமானம். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரு பணிகளை செய்யும் அரசு, தனி நபர் அமைப்புகள் தூர்வாரும் நிலையை வைத்திருக்க கூடாது. விவசாயிகளுக்கு அடிப்படை தேவையான ஏரி, குளங்களை அரசு தூர்வார இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். விழாவில் ஜல்சக்தி மண்டல இயக்குநர் டி.சிவக்குமார் மற்றும் கைஃபா குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.