கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் 400 பேர் கைது

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில், தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் அலுவலகம் அருகே கோவை மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

போலீஸார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதையடுத்து பாஜகவினர் காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்ட நிலையில் திமுக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

பாஜக மகளிர் அணியினர் தண்ணீர் பாக்கெட்டுகளை, சாராய பாக்கெட்டுகள் போல கழுத்தில் அணிந்தபடி பங்கேற்றனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை, முன்னாள் எம்.பி கார்வேந்தன், மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை குறிக்கும் விதமாக உருவபொம்மையை சுமந்து கொண்டு தொண்டர் ஒருவரை உயிரிழந்த நபரை போல தூக்கிக் கொண்டும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். பாஜகவின் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதனிடையே கைதானவர்கள் ராம் நகரில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருமண மண்டபத்துக்கு சென்று கைதான கட்சியினரை சந்தித்து பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE