புதுச்சேரி: பட்ஜெட்டுக்கு முந்தைய நிதித்துறை ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார்.
அப்போது, அவர் முதல்வர் ரங்கசாமி அளித்த கடிதத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரி மாநிலம் வணிகம், கல்வி, ஆன்மீகம் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் சிறப்புமிக்கதாகும். பிரதமரின் தொலை நோக்கு பார்வையில் ஈர்க்கப்பட்டு, இவ்வாட்சிப்பரப்பை பொருளாதார வளர்ச்சியில் மேம்படுத்தவும் மற்றும் நமது மாநில மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டு வழங்கும் நிதி உதவியை குறைந்தபட்சம் 10 விழுக்காட்டு அளவுக்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்பது புதுச்சேரி அரசின் கோரிக்கையாகும்.
எனினும், 2023 - 24ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டை ஒப்பிடுகையில் மத்திய அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு நிதி உதவியை 4.85 விழுக்காடு அளவுக்கே உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் மத்திய நிதி குழுவின் வரம்புக்கு கீழ் கொண்டுவரப்படாததால் மத்திய நிதி உதவியை குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்துவதற்கான உடனடி தேவையும் இருக்கிறது. சுகாதாரம், கல்வி, பொதுப்பணிகள், காவல், வேளாண்மை, வருவாய் மற்றும் பணியாளர்கள் போன்ற முக்கிய துறைகள் உள்ளடங்களாக மற்ற துறைகளையும் சேர்த்து மொத்தமாக காலியாக உள்ள 9,600 காலிப் பணியிடங்களில் 2,748 குருப் ஏ,பி, சி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கை பிரதமரால் கடந்த 2022 ஜூன் மாதம் தர்மசாலா, முதன்மை செயலர் மாநாட்டின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்படுகிறது. எனினும், நமது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான செலவினங்களை மேற்கொள்ளமுடியாத நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழக்கமாக வழங்கும் நிதி உதவிக்கு கூடுதலாக ரூ.254 கோடியை இதற்காக இந்த ஆண்டு முதல் வழங்க கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. பு
» தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரி நூதன போராட்டம்
» அதிமுக வெளிநடப்பு முதல் சிபிஐ விசாரணை குறித்து அமைச்சர் விளக்கம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
துச்சேரி ஆட்சிப் பரப்பில் மூலதன உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்கு, மாநிலங்களுக்கு மூலதன முதலீடுகளுக்காக நிதி உதவி அளித்தல் என்ற இந்திய அரசின் 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இந்த அரசு பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்பித்தது.
இருப்பினும், இந்த திட்டம் மாநிலங்களுக்கு உரித்தான திட்டம் என்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உரித்தானது அல்ல என்றும் கூறி நமது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நமது மாநிலத்தின் மூலதன செலவினமானது 1 விழுக்காட்டிலிருந்து 3-4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதனை மேலும் உயர்த்தும் விதமாக விமானநிலைய விரிவாக்கம், ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாக கட்டுமானம், சுகாதார உட் கட்மைப்பை மேம்படுத்துதல், மருத்துவம் மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களை ஏற்படுத்துதல், கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம், மேம்பாலங்கள் கட்டுமானம் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள தேவைப்படும் கூடுதல் மூலதன நிதியை புதுச்சேரியின் மூலதன ஒதுக்கீடுகளின் கீழ் வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
63 விழுக்காடு அளவுக்கு நகரமயமான புதுச்சேரி ஆட்சிப் பரப்பில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் வகையில் அதிகமான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் தேவைப்படுகிறது. ஊதியங்கள், ஓய்வூதிய அனுகூலங்கள், கடன் சேவைகள் போன்ற நமது ஆட்சிப் பரப்பின் தவிர்க்க முடியாத செலவினங்கள் கடந்த ஆண்டுகளில் உயர்ந்து வரும் காரணங்களால் உட்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்களில் அதிக செலவினங்களை செய்யமுடியவில்லை.
மேலும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது, குறுகிய நிலப்பரப்பை கொண்டு மாநிலம் மற்றும் இயற்கை வளஆதாரங்கள் ஏதும் இல்லாத காரணங்களால் கூடுதல் வருவாயை திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
இவ்வாட்சிப்பரப்பின் நிதி ஆதாரங்களைக் கொண்டு தற்போது இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த குறைந்த பட்சம் 20 வருடங்களாவது ஆகும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன். 2024-25-ம் நிதி ஆண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்திய ஒன்றிய அரசிடம் இணைந்ததற்கான 70-வது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில் இதனை சிறப்பான முறையில் கொண்டாடு வதற்கு மத்திய அரசின் கூடுதல் நிதி உதவி புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை துரிதமாக செயல்படுத்த தேவைப்படுகிறது.
இது தொடர்பாக திருத்திய மதிப்பீடு 2023-24 மற்றும் பட்ஜெட் மதிப்பீடு 2024-25 ஆகியவற்றை இறுதி செய்வதற்காக, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி மத்திய உள்துறை, மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடந்த முந்தைய பட்ஜெட் கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு வேண்டிய நிதி தேவைகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். புதுச்சேரி அரசு மத்திய அரசிடமிருந்து தேவையான நிதி ஆதரவை பெறும் என்பதை முழு மனதுடன் நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.