கலைஞர் நூலக கட்டுமானப் பணியில் சின்ன குறையிருந்தாலும் கண்டுபிடித்துவிடுவேன்!

By கே.கே.மகேஷ்

மதுரையில் கலைஞர் நூலக பணிகளை துருவித்துருவி ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, “கல்வி நிறுவனங்களை நடத்துகிறவன் என்கிற முறையில் எனக்கு 35 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. சின்ன குறைகள் என்றாலும் கண்டுபிடித்துவிடுவேன்” என்று கூறினார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போலவே மதுரை புதுநத்தம் சாலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று மதுரை வந்தார். வெறுமனே தள்ளிநின்று கட்டிடத்தையும், வரைபடத்தையும் பார்த்துவிட்டு போட்டோவுக்குப் போஸ் கொடுக்காமல், கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கே தலைக்கவசத்துடன் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர்.

ஒப்பந்ததாரரிடம், “இது முதல்வரின் கனவுத் திட்டம் தரத்தில் சின்ன குறைகூட இருக்கக்கூடாது” என்று சொன்ன அவர், கட்டிட பணிகளை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் தினமும் வருகிறார்களா என்றும் விசாரித்தார். இதுதொடர்பான கோப்புகளையும் ஆய்வுசெய்த அவர், கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர், கம்பி, சிமென்ட், மணல், ஜல்லி போன்றவற்றின் தரமும் கட்டுமானத்தின் தரமும் தினந்தோறும் பரிசோதிக்கப்படுகிறதா? அதன் ரிப்போர்ட் எங்கே என்று கேட்டு ஆய்வுசெய்தார். கட்டிட வேலைகளில் ஈடுபடுகிற தொழிலாளிகள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரித்தார்.

அருகில் இருந்த உள்ளூர் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ, கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோரிடம், “நீங்களும் அடிக்கடி வந்து இந்தப் பணிகளை ஆய்வுசெய்யுங்கள். அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் தேவையான உதவிகளைக் கேட்டுச் செய்துகொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

கலைஞர் நூலகம் தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "தென்தமிழக மக்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். தரைகீழ் தளம் உள்பட 7 தளங்களைக் கொண்ட இந்த நூலகம் மொத்தம் 2 லட்சம் சதுரடியில் கட்டப்படுகிறது. 11.1.2022-ல் ஒப்பந்தம் போட்டு, ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டோம். ஒப்பந்ததாரரும் 2023 ஜனவரிக்குள் பணிகளை முடித்துத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பணிகள் விரைவாகவும், தரமாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் மேற்கொள்ளப்படுகிறதா? என்று நான் ஆய்வு செய்தேன். அனைத்து பணிகளும் தரமாக நடைபெறுவதுடன், பதிவேடுகளும் சரியாக இருக்கின்றன.

இந்த நூலகத்தைப் பொறுத்தவரையில் இதுவரையில் அண்டர்கிரவுண்ட், தரைத்தளம், 2-வது மாடி, 3-வது மாடி வரையில் பணிகள் முடிந்துள்ளது. இன்னும் 3 தளங்கள் கட்டப்பட வேண்டும். அண்டர்கிரவுண்ட் பகுதியானது கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், ஜெனரேட்டர் நிலையமாகவும் பயன்படுத்தப்படும். தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகப்பிரிவு அமையும். அதேபோல வாசகர்களுக்கான உணவகம், 250 பேர் அமரும் கலையரங்கம் போன்றவையும் அங்கே அமையும். முதல் தளத்தில் குழந்தைகள் பகுதி, தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகள் வாசிக்கும் பகுதி அமையும்.

2-வது தளத்தில், கலைஞர் புத்தகப் பகுதியும் போட்டித்தேர்வு பகுதியும் அமையும். கலைஞர் பகுதியில் அவர் எழுதிய நூல்கள், அரசியல் கட்டுரைகள், கடிதங்கள், திரைப்பட பங்களிப்புகள் குறித்த நூல்கள் இருக்கும். போட்டித்தேர்வு பகுதியில் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட அரசு பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படும். 3-வது தளத்தில் தமிழ் இலக்கிய பகுதியும், அதில் 63 ஆயிரம் புத்தகங்களும் இருக்கும். 4-வது தளத்தில் 63 ஆயிரம் ஆங்கில நூல்கள் இடம்பெறும். 5-வது தளமானது அரிய புத்தக பகுதியாகத் திகழும். அங்கே சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு, அகநானூறு போன்ற பழம்பெரும் நூல்களுடன் தேடித்தேடி சேகரித்த 12 ஆயிரம் அரிய நூல்களையும் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்போகிறோம். 6-வது தளத்தில் பார்வையற்றவர்களுக்கான நூல்கள், டிஜிட்டல் பகுதி போன்றவையும், நூலகர், துணை நூலகர் அறைகளும், மக்கள் தொடர்பு அலுவலர் பகுதியும் அமையும். அந்தப் பகுதியில் கலைஞர் மு.கருணாநிதி சிலையும் நிறுவப்படும்.

ஒட்டுமொத்த நூலகமும் குளிர்சாதன வசதி செய்யப்படும். தரைத்தளத்தில் இருந்து 6-வது மாடி வரையில் செல்ல படிகளும், நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படும். அனைத்துத் தளங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்தடை நேரத்திலும் படிக்கிற வசதி போன்ற நவீன வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு, முதல்வரின் கனவை நிறைவேற்றுகிற அளவுக்கு இந்த நூலகம் அமையும்" என்றார்.

"கட்டுமான பணிகள் உங்களுக்கு மனநிறைவைத் தருகிறதா?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "35 ஆண்டுகளாக நான் சொந்தமாக கல்வி நிறுவனங்களை நடத்திவருவதால், அங்கு பல கட்டிடங்களை கட்டிய அனுபவம் எனக்கிருக்கிறது. எனவே, கட்டுமானப் பணிகளில் சின்ன குறை என்றாலும் நான் கண்டுபிடித்துவிடுவேன். கீழ்தளத்தில் பூச்சு வேலை நடக்கிறதே, அதைக்கூட சரியாக பூசுகிறார்களா என்று கையை வைத்துப் பார்த்தே சொல்லிவிடுவேன்.

கண் பார்வையிலேயே நேர்கோடு போட்டுவிடுவேன். பணிகள் திருப்தியாகவே நடக்கின்றன. ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரிகளிடமும் பணியை சிறப்பாக நிறைவேற்றச் சொல்லியிருக்கிறேன். உள்ளூர் அமைச்சர் கலெக்டர் ஆகியோரிடமும் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்து ஒப்பந்ததாரரையும், அதிகாரிகளையும் ஊக்கப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். நல்வாய்ப்பாக பொதுப்பணித்துறையின் மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் மதுரையிலேயே இருக்கிறது. சென்னையில் இருந்துவந்துதான் இங்கே ஆய்வு செய்ய வேண்டும் என்கிற நிலை இல்லை. தலைமைப் பொறியாளரின் நேரடிப் பார்வையில் இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, தரமான கட்டிடத்தை நாங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்." என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE