இரிடியம் மோசடியில் எனக்குத் தொடர்பில்லை - கலாம் உதவியாளர் பொன்ராஜ்

By கே.கே.மகேஷ்

1 லட்சம் கொடுத்தால் ஆறே மாதத்தில் 1 கோடி தருகிறேன் என்று சொன்ன இரிடியம் மோசடி மன்னன் ராம்பிரபு ராஜேந்திரனிடம் பணம் கொடுத்து ஏமாந்த சினிமா நடிகர்களும், தொழில் அதிபர்களும் தொடர்ந்து போலீஸில் புகார் தெரிவித்துவருகிறார்கள். எப்படி ஏமாந்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, "சில விஞ்ஞானிகள், பிரபலங்களும்கூட ராம்பிரபு ராஜேந்திரனுக்கு ஆதரவாக கூட்டங்களில் பேசினார்கள். அதில் அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜும் உண்டு" என்று கூறினர். நடிகர் விக்னேஷ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரிலும் பொன்ராஜின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதனை பொன்ராஜ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில பேர் எனது புகைப்படத்தை பயன்படுத்தி, எனது பெயரைப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். என் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அபாண்டமான பழிகளை ஏற்படுத்திவரக்கூடிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் எனக்கு தகவல் தெரிவிக்கவும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.

அவரது முழுமையான கருத்தை அறிவதற்காக 'காமதேனு' சார்பில் அவரைத் தொடர்புகொண்டோம். அப்போது நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

உங்களுடைய பதிவைப் பார்த்தோம். ஆனால், தொடர்ந்து பலரும் உங்களைப் பற்றி புகார் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்களே?

நமக்கே தெரியாமல் ஏதாவது பண்ணிவிட்டு, நம்முடைய பெயரைச் சொன்னால் என்ன அர்த்தம்? அது தவறு. அதைவிட முடியாது.

உங்களைப் போன்றோரின் பேச்சை நம்பித்தான் ராம்பிரபு ராஜேந்திரனிடம் ஏமாந்ததாக சென்னையைச் சேர்ந்த முஹம்மது தமீம்கூட கூறியிருக்கிறாரே?

அவரையோ, அடுத்து புகார் கொடுத்த நடிகரையோ (விக்னேஷ்) நான் பார்த்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது. சந்தித்ததும் கிடையாது.

இப்படியான தவறான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் நீங்கள் பேசியதாக அப்துல்கலாமின் அண்ணன் மகனிடமே சிலர் புகார் கூறியதாக தகவல் உள்ளதே?

எந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன்? நான் இதுவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். எங்கேயாவது நான் இந்த இரிடியம் பற்றிப் பேசியிருக்கிறேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் டிஃபென்ஸ் சயின்டிஸ்ட் என்பதால், என்னிடம் வந்து இதுகுறித்து கருத்துக்கேட்கிறார்கள். டெல்லியிலேயே ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்னிடம் வந்து இதுபற்றிக் கேட்டார். அதுவரையில் இரிடியம் மோசடி பற்றிய தகவலை பத்திரிகை செய்திகளில்தான் பார்த்திருந்தேன். ஐஏஎஸ் அதிகாரியே கேட்ட பிறகுதான், இதுபற்றி சீரியஸாக விசாரித்து ஃபேக் என்று கண்டுபிடித்தேன். அது நடந்தது 2014-ல். அதில் இருந்து யாராவது இதுபற்றி என்னிடம் நேரடியாகக் கேட்டால், இது மோசடி, இதில் மாட்டிக்கொள்ளாதீங்க, தப்பிச்சிடுங்க என்று எச்சரிக்க ஆரம்பித்தேன். டிஃபென்ஸ் என்றாலே பலருக்கு என்னுடைய அப்துல்கலாம் சார் பெயரும், என்னுடைய பெயரும்தான் நினைவுக்கு வருகிறது. அதுதான் பிரச்சினை.

நீங்கள் இரிடியத்துக்கு ஆதரவாகவும், இந்தியா வல்லரசாகப் போகிறது என்றும் பேசிய வீடியோவே இருப்பதாகச் சொல்கிறார்களே?

நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது, புகாருக்குள்ளான நபர் (ராம்பிரபு) என்னை வந்து பார்த்தார். அதன் பிறகும், நான் பிஸினஸ் பண்ணுகிறேன், அது இது என்று என்னைச் சந்தித்து, இரிடியம் பற்றிப் பேசினார். அப்போதே, இதெல்லாம் உண்மை கிடையாது என்று அவரிடம் விளக்கினேன். இல்லை சார், எங்களிடம் ஆதாரம் இருக்கு. டிஆர்டிஓ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள் என்றார். எங்கே காட்டுங்கள் என்றேன். ராம்பிரபு அதைக் காட்டினார். அதைப் பார்த்ததுமே சொல்லிவிட்டேன், இது ஃபேக் என்று.

இந்த மாதிரி டாக்குமென்ட் டிஆர்டிஏ-வும் கொடுக்காது, ரிசர்வ் பேங்கும் கொடுக்காது. எனவே, நீயும் ஏமாந்துவிடாதே, அடுத்தவர்களையும் ஏமாற்றிவிடாதே என்று சொன்னேன். இனிமேல் இது சம்பந்தமாக என்னிடம் வராதே என்று தெளிவாகச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் என்னிடம் வந்ததில்லை. நான் இரிடியம் பற்றி பேசிய வீடியோ இருந்தால் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். என்னிடம் தனிப்பட்ட முறையில் நேரிலோ, போனிலோ ஆலோசனை கேட்டவர்களிடம் வேண்டுமென்றால், அட்வைஸ் பண்ணியிருப்பேனே தவிர, பொது நிகழ்ச்சிகளில் அதுபற்றிப் பேசியதில்லை. நான் எல்லோரும் எளிதில் தொடர்பு கொள்கிற நிலையில் இருக்கிறேன் அல்லவா? அதுதான் தப்பு என்று நினைக்கிறேன். இனிமேல் யாரும் பக்தத்தில் வந்து போட்டோ எடுக்கக் கேட்டால்கூட அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இவ்வாறு பொன்ராஜ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE