> “கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு” - இபிஎஸ்: சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது: இன்றைய தினம் வரை கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில் இறப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அரசோ, மெத்தன போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனையை செய்திருக்க முடியாது. மேலும், திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கும், திமுக மாவட்டச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இவ்விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ வேண்டும். இதையொட்டியே நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளோம். நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து பயந்து வெளியேறவில்லை. முதல்வருக்கு தைரியம் இருந்திருந்தால் எங்களுடன் விவாதித்திருக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
> “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை”: “சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
> திருச்சி பச்சமலையில் சாராய ஊறல் அழிப்பு: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு பச்சமலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள நெசக்குளம் கிரமத்தில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச் சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
» மதுவிலக்கை அமல்படுத்த கோரி பெரிய அளவில் போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு
» கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
> “விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளுக்கு தடை இல்லை”: “அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
> நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை: மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கூடியது. இதில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கூட்டத்துக்கு வந்திருந்த நிதி அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கைக்கே சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்றார்.
> ஆந்திராவில் ஒய்எஸ்ஆர்சி கட்சி அலுவகம் இடிப்பு: விஜயவாடாவின் தாடேபல்லே மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் மைய அலுவலகம் சனிக்கிழமை காலை இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் பழிவாங்கும் அரசியலின் ஆரம்பம் என ஒய்எஸ்ஆர்சிபி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
> அசாம் வெள்ளத்தல் 4 லட்சம் பேர் பாதிப்பு: அசாம் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக இந்தாண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் 3,90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல், 1,71,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 15,160 பேர் மட்டுமே தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
> ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராக டிடிபி அய்யண்ணபத்ருடு தேர்வு: ஆந்திர மாநிலத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக நர்சிபடினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியின் அய்யண்ணபத்ருடு சனிக்கிழமை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாபாநாயகர் பதவிக்கு வெள்ளிக்கிழமை 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாவும், அவை அய்யண்ணபத்ருடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆந்திர சட்டப்பேரவைச் செயலாளர் பிபிகே ராமச்சார்யுலு தெரிவித்தார்.
> இரண்டாவது நாளாக அதிஷி உண்ணாவிரதம்: டெல்லி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இரண்டாவது நாளாக தனது உண்ணாவிரதத்தினைத் தொடர்ந்தார்.
> பிரஜ்வல் ரேவண்ணா சகோதரருக்கு பாலியல் புகார் மிரட்டல்: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பிரஜ்வல் ரேண்ணாவின் மூத்த சகோதரரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா, கர்நாடாகாவின் ஹாசனில் உள்ள நபர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலியாக வழக்கு போட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.