புலையர்கள் மீண்டும் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படுவார்களா?

By கவிதா குமார்

"ஏற்கனவே பழங்குடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட புலையர் இன மக்களை மீண்டும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு கூறினார்.

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு நன்றி தெரிவித்தார்.

பி.டில்லிபாபு

மேலும் அவர் கூறுகையில், "ஈரோடு மாவட்ட மலையாளி, புலையர், வேட்டைக்காரன் மற்றும் குறவன் இனத்தைச் சேர்ந்த உப்புக்குறவன், தப்பைக்குறவன், பாத்திரக்குறவன், ஆத்தூர் மேல்நாட்டு குறவன், ஆத்தூர் கீழ்நாட்டு குறவன் உள்பட 27 பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு பிரிந்ததால் அந்த மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி பட்டியலில் மலையாளி மக்கள் இடம் பெறவில்லை. மாவட்டம் பிரிந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது" என்று கூறினார்.

"தமிழகத்தில் வசிக்கக்கூடிய குறும்பர்களை பழங்குடி மக்களாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கை இன்று வரை நிறைவேறாமல் உள்ளது. பழங்குடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட புலையர் இனமக்களை மீண்டும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன். இந்த கோரிக்கையை ஏற்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குநரும் ஆய்வறிக்கை தந்தும், இத்தனை ஆண்டுகளாகியும் புலையர் இனமக்களை மீண்டும் பழங்குடி பட்டியலில் சேர்க்க முடியவில்லை. எனவே புலையர், வேட்டைக்காரன், குறவரில் உள்ள 27 பிரிவினர், ஈரோடு மாவட்ட மலையாளி இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டில்லிபாபு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE