சென்னை: ‘எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர்நடிகர் விஜய், தனது 50-வது பிறந்தநாளை ஜுன் 22-ம் தேதி (இன்று)கொண்டாடுகிறார். கட்சித் தலைவராக தனது முதல் பிறந்தநாளை விஜய் கொண்டாடுவதால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர்உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சிக்கு நேற்று முன்தினம் நேரில்சென்ற நடிகர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும்இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு ஆளும் கட்சியின் அலட்சியமே காரணம் என கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
» நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
‘‘தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று வழங்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கட்சி நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச்செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் உத்தரவை அடுத்து,பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். மேலும், அந்தந்த மாவட்டங்களில் திட்டமிட்டிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தவெக நிர்வாகிகள் ரத்து செய்துள்ளனர்.