பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் போராட்டம்: கடலூரில் கு.பாலசுப்ரமணியன் தகவல் 

By க. ரமேஷ்

கடலூர்: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் மூன்று அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர்கள் இயக்க மாநில தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று (ஜூன்.21) செய்தியாளர்களை சந்தித்த கு.பாலசுப்ரமணியன் கூறியதாவது: ''கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில், விஷச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமானவர்களை தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கணவன்மார்களை இழந்து தவிக்கும் பெண்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் ஒட்டு மொத்த பூரண மதுவிலக்கு தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இதே போல தமிழகத்தில் போதை பொருட்களையும், அதன் நடமாட்டத்தையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.

போதை பொருள் மற்றும் கள்ள சாராயத்தை ஒழிக்க கோரியும், முழு பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர்கள் இயக்கம், தமிழ்நாடு தன்னுரிமை கழகம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் வருகிற 25ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்தப் போராட்டம் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துகிற வரை தொடர்ந்து நடைபெறும் என்ற அவர் தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE