சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து ஒன்றுமே தெரியவில்லை என்றும், அந்த மருத்துவமனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய ஓமிப்ரசோல் மருந்தும் மருத்துவமனைகளில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கள்ளச் சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மருத்துவமனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் சிகிச்சை பெறுகிறாரகள், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நான் நேரில் சென்றேன். அந்த மருத்துவமனையை அதிமுக ஆட்சிக் காலத்தின்போது பிரம்மாண்டமாக கட்டிக்கொடுத்தோம். ஆனால், அங்கு தற்போது போதிய மருத்துவர்கள் இல்லை; மருந்துகளும் இல்லை. கள்ளச் சாராய விஷத்தைப் போக்கக்கூடிய முக்கிய மருந்தான ஓமிப்ரசோல் (Omeprazole) மருந்து இல்லை. மருந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் சொல்கிறார். இது பச்சைப் பொய். ஓமிப்ரசோல் மருந்து சுத்தமாக இல்லை.
» கள்ளச் சாராய பலி அதிகரிப்பு முதல் அதிமுகவினரின் வெளியேற்றம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து கடந்த 19ம் தேதி 3 பேர் இறந்தார்கள். ஆனால், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த செய்தியாளர் சந்திப்பில், ஒருவர் வயிற்று வலி காரணமாக இருந்தார் என்றும், 2வது நபர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் என்றும், 3வது நபர் வலிப்பு காரணமாக இறந்தார் என்றும் அவர் பொய்யான செய்தியை வெளியிட்டார். அரசின் தூண்டுதலின்பேரிலேயே அவர் இவ்வாறு பச்சைப் பொய்யை கூறியுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்துத்தான் 3 பேர் மரணம் அடைந்தார்கள் என்ற உண்மைச் செய்தியை மாவட்ட ஆட்சித் தலைவர் அப்போதே கூறி இருந்தால், கள்ளச்சாரயம் குடித்தவர்கள் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பார்கள். அதுமட்டுமல்லாது, மாவட்ட ஆட்சித் தலைவரின் பேட்டிக்குப் பிறகு பலர் (விஷயம் தெரியாமல்) கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி கொடுக்கும்போது அந்த மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ அருகில் இருக்கிறார்.
எனவே, அழுத்தத்தின் காரணமாகவே ஆட்சித் தலைவர் அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார். எனவே, அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். மற்ற அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தமிழக அரசு, அரசுக்கு துணையாக இருந்த மாவட்ட ஆட்சியரை மட்டும் இடமாற்றம் செய்திருக்கிறது. ஆளும் கட்சி இதில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.
இந்த சம்பவத்துக்கு திமுக முக்கிய நிர்வாகிகளே காரணம். இல்லாவிட்டால், கள்ளக்குறிச்சி மையப் பகுதியில் 3 ஆண்டுகளாக எவ்வாறு கள்ளச்சாராயம் விற்க முடியும்? திமுகவைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாக அங்குள்ள பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். அதுகுறித்தெல்லாம் காவல் துறை விசாரணை நடக்கவே இல்லை.
கட்சிக்காரர்களைக் காப்பாற்றுவதில்தான் ஆட்சியாளர்கள் குறிக்கோளாக இருக்கிறாரகள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்றவரின் வீட்டின் கதவில் ஆளும் கட்சியின் உதயசூரியன் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளும் கட்சி, கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகிறது என்பது உறுதியாகிறது. ஆட்சி அதிகாரத்தை வைத்து கள்ளச்சாராயம் விற்றதன் விளைவாக விலைமதிக்க முடியாத 50க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
அவ்வப்போது, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக்கூட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இருந்தும் இந்த துயர சம்பவம் எப்படி நடந்தது? இது ஒரு திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர். கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது.
கள்ளச்சாராயம் விற்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் காவல்நிலையம் உள்ளது. நீதிமன்றமும் அங்குதான் உள்ளது. நீதிமன்றத்தின் வளாகத்தை ஒட்டியே கள்ளளச்சாராய விற்பனையை செய்திருக்கிறார்கள். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலகமும் அங்கேதான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய அந்த இடத்திலேயே தொடர்ந்து 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்று சொன்னால், இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் நியாயம். இந்த விஷயத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணை சரியாக நடக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் சரியாக செயல்படுமா? மக்களுக்கு நீதி கிடைக்குமா?
உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒரு வருடத்துக்கு முன் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தார்கள். இந்த விஷயத்தை சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது என்பது குறித்து எந்த உண்மையும் வெளிவரவில்லை. வெளிப்படைத்தன்மையே இல்லை. இப்போதும் அப்படித்தான் இருக்கும். எனவேதான் சிபிஐ விசாரணை வேண்டும்.
அதிமுக ஆட்சியின்போது, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டதாகக் கூறினார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தற்போது அவருக்கு ஒன்றும் தெரியாதுபோல. கள்ளக்குறிச்சியில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளபோதிலும், திமுக கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கூட்டணி வையுங்கள். தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரச்சினைகளைப் பேசுங்கள். இல்லாவிட்டால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகள் கண்டனம் கொடுக்காதது வேதனை அளிக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.