ராகுல் காந்தியைச் சந்தித்த ஜி-23 தலைவர் பூபேந்திர சிங் ஹூடா!

By காமதேனு

காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்துவரும் ஜி-23 குழுவினருடன் மேலும் சில தலைவர்கள் நேற்று இரவு டெல்லியில் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கும் நிலையில், கட்சியின் முன்னாள் ராகுல் காந்தியை ஹரியாணா முன்னாள் முதல்வரும், ஜி-23 குழுவைச் சேர்ந்தவருமான பூபேந்திர சிங் ஹூடா இன்று சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும் என்றும்,உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்சித் தலைமைக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 தலைவர்கள் ‘ஜி-23’ தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

ஜி-23 தலைவர்கள்

இவர்களில் பலர் மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதல்வர்களாகவும் பதவிவகித்தவர்கள். கட்சியின் தொடர் தோல்விகள் குறித்த சுயபரிசோதனை அவசியம் எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தவர்கள்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் படுதோல்விக்குப் பின்னர், இந்தத் தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகத் தீவிரமாகச் செயலாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். இக்குழுவைச் சேர்ந்த தலைவர்களுடன், பிரணீத் கவுர் (கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி), குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா (2017-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்) போன்ற தலைவர்களும் நேற்று இரவு குலாம் நபி ஆசாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து ஜி-23 குழு விஸ்தரிக்கப்படுகிறதா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த தலைவரை தனியாகச் சந்தித்த முதல் ஜி-23 தலைவர் பூபேந்திர சிங் ஹூடாதான்.

ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் சலசலப்புக்கும் பூபேந்திர சிங் ஹூடாவுக்குப் பங்கு உண்டு. கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பு தனக்கோ தனது மகன் தீபேந்தர் ஹூடாவுக்கோ வழங்கப்பட வேண்டும் என்று பூபேந்திர சிங் கட்சித் தலைமையை வலியுறுத்திவந்தார். எனினும், சோனியா காந்தி குடும்பத்தினருடன் நெருக்கமானவராகக் கருதப்படும் செல்ஜா குமாரிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதில் பூபேந்திர சிங் கடும் அதிருப்தியில் இருந்தார்.

பஞ்சாபில் ஆட்சியை இழந்ததுடன், மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அடுத்த நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள கட்சி தன்னை வலுப்படுத்திக்கொண்டாக வேண்டும் எனும் எண்ணம் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரிடமும் நிலவுகிறது. எனினும், ஏற்கெனவே நிலவும் பூசல்கள் காரணமாக இதில் ஒருமித்த கருத்துடன் முக்கிய முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், ராகுலுடனான பூபேந்திர சிங் ஹூடாவின் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE