ஆளுநருக்கு ஸ்டாலின் தந்த புத்தகத்தில் என்ன விசேஷம்?

By கவிதா குமார்

தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் நூலாடைகளுக்குப் பதில், புத்தகங்களைத் தாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அத்துடன் தான் சந்திக்கும் தலைவர்களுக்கும் அவர் புத்தகங்களையே பரிசாக வழங்கி வருகிறார். திமுகவினரும் இந்த கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நீட் விலக்கு சட்ட முன்வடிவு மற்றும் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வலியுறுத்தினார். அப்போது ஆளுநருக்கு ஒரு புத்தகத்தை ஸ்டாலின் பரிசாக வழங்கினார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இணைந்து எழுதிய 'தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்கும் திராவிட மாடல்' என்ற புத்தகம் தான் அது. சமூக நீதி குறித்த திராவிட இயக்கத்தின் பார்வை, அதன் பின் வந்த திராவிடக்கட்சிகள் ஆட்சியில் சமூகநீதியின் அடிப்படையில் வகுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக இந்த புத்தகம் பேசியுள்ளது.

இந்த நேரத்தில் தமிழக ஆளுநருக்கு இந்தப் புத்தகத்தை வழங்கியதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தென் மண்டல திமுக முக்கிய நிர்வாகி ஒருவர், “ நீட் என்ற சமூகநீதிக்கு எதிராக தமிழக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாகத் தான், குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலதாமதப்படுத்தி வருகிறார். பாஜகவின் கருத்தியலைக் கொண்ட அவருக்கு, சமூக நீதி என்றால் என்ன? அதில் திராவிடர்கள் செய்த சாதனை என்ன என்பதை எல்லாம் புரிந்து கொள்ளவே ஸ்டாலின் இந்தப் புத்தகத்தை வழங்கியுள்ளார் ” என்று சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE