கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அதிமுக வழக்கு இன்று விசாரணை

By KU BUREAU

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக அதிமுக சட்டத் துறை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே முதல்முறையாக கடந்த 1937-ம் ஆண்டு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ராஜாஜியால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு ஒருங்கிணைந்த தமிழ்நாடு மாநிலம் முழுவதும் இந்த மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சியிலும் இந்த மதுவிலக்கு தொடர்ந்தது.

பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 1971-ம் ஆண்டு பட்டைச் சாராயம், கள் விற்பனைக்கு அனுமதி அளித்தார். பிறகு கடந்த 1974-ம் ஆண்டு அவரே அதற்கு தடை விதித்தார். அதன்பிறகு, மது விற்பனை என்பது தமிழகத்தில் படிப்படியாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

கள்ளச் சாராயத்தால் கடந்த 2023-ம்ஆண்டு மரக்காணத்தில் 17 பேரும், பிறகு,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். உயிரிழப்பு தொடர்ந்தபோதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகவே, கள்ளக்குறிச்சியில் தற்போது உயிரிழப்பு நேரிட்டுள்ளது.

கள்ளச் சாராய வியாபாரியான கன்னுக்குட்டிக்கும், உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி அத்தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஏற்கெனவே மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் எந்தநடவடிக்கையும் எடுக்காததால், இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் செந்தில்குமார் பேசியுள்ளார். அவர் கொடுத்த புகார் மீது எஸ்.பி. நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. தவிர, இந்த உயிரிழப்புக்கு விஷச் சாராயம் காரணம் அல்ல என்று, மாவட்ட ஆட்சியர் தன்னை இடமாற்றம் செய்வதற்கு முன்பாக முரண்பாடாக கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 47-வது பிரிவு, அப்பாவி மக்களை கள்ளச் சாராயத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான அதிகாரத்தை ஆட்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது. ஆனாலும், கள்ளச் சாராயத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது.

எனவே, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக பிரேத பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்யஉத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு அமர்வில், மனுதாரரான வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரையும், வழக்கறிஞர் டி.செல்வமும் முறையிட்டனர். இதையடுத்து, வழக்கை இன்று (ஜூன் 21) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE