கர்ஹால் வெற்றி தொகுதிவாசிகளுக்கா, சுயகவுரவத்திற்கா? - அகிலேஷுக்கு அடுத்த சிக்கல்!

By ஆர். ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதற்கான போரில் தோல்வியுற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்குப் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. ஆஸம்கர் மக்களவைத் தொகுதி எம்.பி-யான அவர், இந்தத் தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கி வென்றுவிட்டார். ஆனால், பாஜகவிடம் தோல்வியடைந்துவிட்டதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், எம்.பி பதவியில் தொடர்வதா, கர்ஹால் எம்எல்ஏ-வாக நீடிப்பதா எனும் கேள்வி அவர் முன் எழுந்திருக்கிறது. முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்றது தொகுதிவாசிகளுக்காகவா, தனது சுவகவுரவத்திற்காகவா என்றும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

மரபை உடைத்த யோகி

உத்தர பிரதேசத்தின் முதல்வர் பதவியில் அமர்பவர்கள் அதன் சட்டப்பேரவையில் போட்டியிடுவது இல்லை என்ற நிலை இதற்கு முன்பு இருந்தது. பெரும்பாலும் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒன்றில் எம்.பியாக இருப்பவர்கள் பின்வாசல் வழியாக முதல்வராகி வந்தனர். இதற்காக அவர்களுக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள மேலவை உதவி வந்தது. இந்தப் போக்கை யோகி ஆதித்யநாத் உடைத்திருக்கிறார். கோரக்பூர் எம்.பி-யாக இருந்த யோகி, கடந்த முறை முதல்வரான பின்னர், மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இவர்களில், அகிலேஷ் மட்டும் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கத் தயாரானார். யாதவர்கள் அதிகம் வசிக்கும் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதியைத் தேர்வுசெய்தார். இதற்கு அவரது தந்தையான சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், மக்களவை எம்.பியாக மெயின்புரியில் வகிப்பதும் காரணமானது. இங்கு அகிலேஷை எதிர்க்க மத்திய இணை அமைச்சரான எஸ்.பி.பகேல், பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார். 66,782 வாக்கு வித்தியாசத்தில் அவரை அகிலேஷ் தோற்கடித்தார். இருப்பினும், உத்தர பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பும் கிடைக்காததால், கர்ஹாலில் அகிலேஷ் எம்எல்ஏவாகத் தொடர்வது கேள்விக்குறியாகி விட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் ஆஸம்கரின் எம்.பியான அகிலேஷ், தேசிய அரசியலைத் தொடர, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் எனவும் பேசப்படுகிறது. இதன் இடைத்தேர்தலில், கர்ஹாலில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த சப்ரன்சிங் போட்டியிடுவார் என எதிர்நோக்கப்படுகிறது. இங்கு அகிலேஷின் குடும்பத்தார் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளன.

தொகுதி மக்கள் புலம்பல்

இந்தத் தேர்தலில் மகன் அகிலேஷின் வெற்றிக்காக உடல்நிலை குன்றிய போதும் முலாயம் இங்கு பிரச்சாரம் செய்திருந்தார். தனது கவுரவத்தைக் காக்க மகனை வெற்றிபெற வைக்கும்படியும் கோரியிருந்தார் முலாயம். அவர் கேட்டது போல் அகிலேஷுக்குக் கிடைத்த வெற்றி அவரது கவுரவம் காக்க மட்டுமே என்றாகிவிட்டது. இனி அவர் ராஜினாமா செய்தால் அவர் தம்மை எப்படிக் காப்பார் என கர்ஹால் தொகுதிவாசிகள் புலம்பத் தொடங்கிவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE