விசிகவிற்கு எதிராக ஓபிஎஸ், தங்கத் தமிழ்செல்வன் கூட்டணி!

By கவிதா குமார்

பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் தேர்தல் பதவியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமரக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், தங்கத் தமிழ்செல்வனும் கூட்டு சேர்ந்து சதி செய்வதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் பரபரப்பு குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கு அக்கட்சியின் சார்பாக 15 வது வார்டில் வெற்றி பெற்ற பிரேம்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பெரியகுளம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த சுமிதா பதவியேற்ற அன்று பிரேம்குமார் துணைத்தலைவர் பதவியேற்க காத்திருந்தார். ஆனால், திமுகவைச் சேர்ந்த ராஜாமுகமது என்பவரை திமுகவினர் துணைத்தலைவராக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த விசிகவினர் உடனடியாக திமுக, விசிக தலைமைகளுக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.

இதையடுத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினத்துடன், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்செல்வனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேம்குமார் விரைவில் துணைத்தலைவராவார் என்று அவர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை பிரேம்குமார் துணைத்தலைவராக முடியவில்லை.

இதனைக் கண்டித்து பெரியகுளத்தில் நேற்று உண்ணாவிரதப்போராட்டம் நடத்த விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்தனர். ஆனால், காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியகுளத்தில் விசிக சார்பில் நடைபெற்ற அறவழி போராட்டம்.

பெரியகுளத்தில் என்னதான் நடக்கிறது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளைஞரணி மாவட்ட செயலாளர் அ.மதுவிடம் கேட்டோம். ' பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் ஒதுக்கீடு செய்தார். நகராட்சியில் வெற்றி பெற்ற 2 விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் தலைவர் சுமிதாவிற்கு ஆதரவளித்தனர். ஆனால், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைத்தலைவர் வேட்பாளர் பிரேம்குமாருக்கு திமுகவினர் வாக்களிக்கவில்லை. துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜாமுகமது மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டதால், நாங்கள் என்ன செய்ய முடியும் என திமுக மாவட்ட நிர்வாகிகள் கேட்கின்றனர். பிறகெதற்கு நகராட்சி நடவடிக்கைகளில் ராஜாமுகமது பெயர் இடம் பெறுகிறது?' என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், ' பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வரக்கூடாது என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், திமுகவைச் சேர்ந்த தங்கத் தமிழ்செல்வனும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான் பிரேம்குமாருக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட வேண்டும். விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க அவர் நடவடிக்கை வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE