மரபு மீறினாரா மதுரை மேயர்?

By கவிதா குமார்

மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணி, மேயர் அங்கியுடன் சென்னையில் அமைச்சரை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் பதவி, இந்த முறை பெண் பிரதிநிதிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த பதவியைக் கைப்பற்ற திமுகவில் கடுமையான போட்டி நிலவியது. இதில் திமுக அமைச்சர்கள் பலர் தங்களது ஆதவாளர்களை மேயராக்க பெரும் முயற்சி எடுத்தனர். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ஆதரவாளரான இந்திராணிக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கண்ணப்பன் தனது ஆதரவாளரான வாசுகிக்கும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தனது ஆதரவாளரான ரோகிணிக்கும், தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தனது ஆதரவாளரான பொம்மத்தேவனின் மகள் ரோகிணிக்கும் மேயர் பதவிக்காக திமுக தலைமையிடம் சிபாரிசு செய்தனர். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கமும், தனது மருமகள் விஜயமெளசுமிக்கு மேயர் வாய்ப்பு கோரினார்.

ஆனால், இந்த ரேஸில் இந்திராணியே வெற்றி பெற்றார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பலத்த சிபாரிசு காரணமாக இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. மேயர் பதவியேற்பு விழாவிற்காக சென்னையில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் வரை இரண்டு மணி நேரம் காத்திருந்து இந்திராணி பதவியேற்றது மற்ற மான்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் புறக்கணித்தது கட்சி தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேயர் பதவியேற்ற பின்பு, ”எனது பணி முழுவதும் நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் மேற்பார்வையில் மட்டுமே நடைபெறும்’’ என்று இந்திராணி ஒரு பகீர் அறிக்கையை வெளியிட்டார். தமிழகத்தில் திமுக அமைச்சர்கள், மேயர்கள், துணைமேயர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி நடக்கும் போது, மதுரை மேயர் மட்டும், நிதியமைச்சர் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்படுவேன் என்று அறிக்கை விடுவது அதிகபிரசங்கித்தனம் என்று திமுகவினர் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பிறந்த நாளையொட்டி மதுரை மேயர் இந்திராணி பூங்கொத்து, புத்தகம், இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநகராட்சி கூட்டத்தில் அணிய வேண்டிய மேயர் அங்கியை அவர் அங்கு அணிந்திருந்தார். இது தான் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதுவரை மதுரை மேயராக இருந்தவர்கள் சபை மரபைத் தொடர்ந்து கடைபிடித்தார்கள். ஆனால், புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணி, மரபு மீறியுள்ளார். ஆனால், இது பெரிய குற்றமில்லை என்று முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``குடியரசு தலைவர், பிரதமர், கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரை விமான நிலையத்தில் மதுரையின் மேயராக வரவேற்கும் போது அவர் அந்த அங்கியை அணியலாம். ஆனால், வெளிநிகழ்ச்சிகளில் அணியக்கூடாது'' என்றனர். அமைச்சர் மீது மேயருக்கு விசுவாசம் இருக்கலாம். அதுவே, மரபு மீறிய விசுவாசமாக இருக்கலாமா என்பது தான் மதுரை திமுகவினர் மத்தியில் பரவலான பேச்சாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE