மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசுப் பொருட்காட்சி கடந்த மே மாதம் 23-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத் துறைகளின் சார்பில் அரங்குள் இடம்பெற்றுள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத் துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகளும் இடம்பெற்றுள்ளன. தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதுவரை அரசுப் பொருட்காட்சியை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இப்பொருட்காட்சி ஜூலை 6-ம் தேதியுடன் நிறைவடைவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
» தி.மலை கிரிவல பாதையில் கஞ்சா போதையில் போலி சாமியார்கள் அடாவடி!
» கோவை - சென்னை ‘கோவை விரைவு ரயில்’ ஜூன் 26 வரை பெரம்பூர் வரை மட்டுமே இயக்கம்