மாயாவதி வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

By ஆர். ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கும், சமாஜ்வாதிக்கும் இடையே சரிநிகர் போட்டி நிலவியது. இதில் தன்னுடைய பகுஜன் சமாஜ் கட்சியே ஆட்சி அமைக்கும் எனக் கூறிய மாயாவதி, வெறும் ஒரு தொகுதியில் முன்னணி வகிக்கிறார். இதன்மூலம், அவரது முக்கிய ஆதரவாளர்களாக பட்டியலின வாக்காளர்களும் மாயாவதியை கைவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உபியில் நான்கு முறை முதல்வர் பதவி வகித்தவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. இதில் கடைசியாக அவர் 2007 சட்டப்பேரவை தேர்தலில் தனிமெஜாரிட்டியுடன் உபியில் ஆட்சி அமைத்திருந்தார். இதற்கு உபியில் அதிகமுள்ள பட்டியலின வாக்காளர்களே காரணாக இருந்தனர். ஆனால், 2012 சட்டப்பேரவை தேர்தலில் அவர் சமாஜ்வாதியிடம் தன் ஆட்சியை பறிகொடுத்தார். இதன் பிறகு சரியத் துவங்கிய மாயாவதியின் செல்வாக்கு மீள்வதாகத் தெரியவில்லை.

இவருக்கு கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகள் கிடைத்திருந்தன. இருப்பினும் நம்பிக்கை தளராத மாயாவதி, உபியில் மீண்டும் பிஎஸ்பி உறுதியாக ஆட்சி அமைக்கும் எனக் கூறி வந்தார். இந்தமுறை தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் கடைசிநேரத்தில் தனது கட்சி வேட்பாளர்களையும் அவர் மாற்றினார். இதற்கும், இன்று வெளியான முடிவுகளில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அவரது கோட்டையாகக் கருதப்படும் ஆக்ரா, அம்பேத்கர்நகர், பிஜ்னோர் மற்றும் முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் இருந்த தனது தொகுதிகளையும் இழந்துள்ளார் மாயாவதி. அம்பேத்கர் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் பிஎஸ்பிக்கு, பத்தேரி, ஜலால்பூர் மற்றும் அக்பர்பூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து மாயாவதியின் கட்சியினரிடம் இருந்தது. இந்த மூன்றில், இரண்டு தொகுதிகளின் எம்எல்ஏக்களை தன் கட்சியிலிருந்து நீக்கியிருந்தார் மாயாவதி. இவர்கள் தங்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பார் எனக் காத்திருந்தனர். இது நிகழாமையால் அவர்கள் இருவரும் சமாஜ்வாதியில் இணைந்தனர். இதில், இந்தமுறை பிஎஸ்பிக்கு தோல்வி கிடைத்துள்ளது.

ஆக்ரா மாவட்டத்தில் அதன் ஊரகப்பகுதி, இத்மாத்பூர், ஆக்ரா ராணுவக் குடியிருப்பு, பத்தேபூர் சிக்ரி மற்றும் கேடாகர் ஆகிய தொகுதிகளையும் பிஎஸ்பி தற்போது இழந்து நிற்கிறது. இந்தவகையில், முசாபர்நகரின் சத்ராவல், பிஜ்னோரின் சதர்பூர், நஜீபாபாத் மற்றும் புர்காஜி பிஜ்னோர் ஆகியவற்றிலும் பிஎஸ்பிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

உபியில் மொத்தம் 86 தனித்தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாஜக கடந்த தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. இந்தமுறை, அந்த தொகுதிகளில் வெற்றி பெற பிஎஸ்பி திட்டம் வகுத்தது. இத்துடன் பிராமணர் மற்றும் உயர்குடி வாக்குகளையும் பெற மாயாவதி வியூகம் வகுத்தார். தனது கட்சியின் பொதுச்செயலாளரான பிராமண சமூகத்தின் சதீஷ்சந்திர மிஸ்ராவை அனுப்பி மாநிலம் முழுவதிலும் கூட்டங்கள் நடத்தினார். இதற்கும் இந்த தேர்தலில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

கடந்த 2017 தேர்தலில் பிஎஸ்பி 22.2 சதவீத வாக்குகள் பெற்றது. இது தற்போது வெறும் 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. உபியின் அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் மட்டுமே இதுவரை நான்காவது இடத்தில் இருந்தது. இந்த தேர்தலில் பிஎஸ்பி, காங்கிரஸைவிட மூன்று தொகுதிகளில் குறைவாக வெறும் ஒன்றில் முன்னணி பெற்றுள்ளது. இதனால், மாயாவதியில் பிஎஸ்பி இந்த தேர்தலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE