பெரியகுளம் மஞ்சளாறு அணையில் 3-ம் கட்ட அபாய எச்சரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே, யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு சேகரமாகிறது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 57 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 44 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக, நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 6-ம் தேதி 53 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல் மற்றும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இன்று (வியாழன்) அணையின் நீர்மட்டம் 57 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

ஆகவே தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சிவஞானபுரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அணைக்கு வரும் 94 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE