கே.என்.நேருவின் நட்பு வட்டம்... இன்று! - 7

By கரு.முத்து

திருச்சி சிறையிலிருந்து 90 நாட்கள் கழித்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “நான் ஜெயிலில் இருந்த மாதிரியே தெரியல. அதற்குக் காரணம் எட்வின் ஜெயக்குமார்தான்” என்றார். தன்னை வழியனுப்பிவைத்த சிறை அதிகாரிகளிடம்கூட”எட்வின் ஜெயக்குமார் செய்த உதவிகளை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டுத்தான் வந்தார் அழகிரி.

சிறை மீண்ட அழகிரியை ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வந்து வரவேற்றார்கள். அவரை அழைத்துச் செல்ல அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பரணிக்குமாரின் கார் தயாராக இருந்தது. காரில் அழகிரி முன்னால் உட்கார, பின் சீட்டில் ஸ்டாலின் ஏறிக்கொண்டார். “நீங்களும் ஏறிக்கொள்ளுங்கள்” என்று அழகிரி சொல்ல, காரில் ஏறி ஸ்டாலினுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் எட்வின் ஜெயக்குமார். மிகப்பெரிய ஊர்வலம் சிறைவாசலில் இருந்து திருச்சி சங்கம் ஹோட்டலுக்குச் சென்றது. அங்கே மகன் அழகிரியின் வருகைக்காகக் காத்திருந்த தயாளு அம்மாள் எட்வினின் கையைப் பிடித்துக் கொண்டு, “ரொம்ப நன்றிப்பா” என்று கண்ணீர் மல்கினார்.

தான் ஜெயிலில் இருந்த கதையை தயாளு அம்மாவிடம் விவரித்த அழகிரி, அங்கு ஒரு ஆடு குட்டி போட்ட விஷயத்தையும் சொன்னார். உடனே தயாளு அம்மாள், “அந்த ஆட்டுக்குட்டியை கொஞ்சம் பெருசாப் போனப்பறம் அழகிரிக்கு வாங்கித்தாப்பா” என்று எட்வினிடம் சொன்னார். இரண்டு மாதம் கழித்து அந்த ஆட்டுக்குட்டியை வாங்கிக் கொண்டுபோய் அழகிரியின் வீட்டில் கொடுத்தார் எட்வின். இப்படி அழகிரியோடும், கருணாநிதியின் குடும்பத்தோடும் நெருங்கிப் பழகினார் எட்வின்.

அன்பழகன் மேடையில்...

திறமையான வழக்கறிஞராக பணியாற்றினாலும் தேர்தல் ஆசையும் எட்வினுக்கு அதிகமிருந்தது. அதனால் 1989 தொடங்கி ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக சார்பில் திருச்சி 1 தொகுதியில் போட்டியிட தொடர்ந்து விருப்பமனு கொடுத்துவந்தார். அதேபோல மக்களவை தேர்தல்களிலும் திருச்சி தொகுதிக்கு விருப்பமனு அளித்து வந்தார்.

2004 மக்களவைத் தேர்தலில் சீட் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட திருச்சி சிவாவையும், என்.செல்வராஜையும் ஓரம் கட்ட நினைத்தவர்கள், அவர்களைச் சமாளிக்க அழகிரியின் அன்புக்குரியவரான எட்வின் ஜெயக்குமாரை தயார் செய்தார்கள். கட்சிக்காக உழைக்கும் எட்வினுக்கு இம்முறை சீட் கொடுக்கவேண்டும் என்று தலைமைக்கும் சிபாரிசு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு நான்கு சீட் கொடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக லாவகமாக திருச்சியை தள்ளிவிட்டார் நேரு என்று சொன்னார்கள். “அது தலைமை எடுத்த முடிவு, அதில் நேரு என்ன செய்யமுடியும்?” என்று கேட்டவர்களும் உண்டு.

எப்படியோ அப்போதும் எட்வினுக்கான வாய்ப்பு பறிபோனது. அதனால் 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவர்கள், வெள்ளாளர்கள் அதிகமுள்ள திருச்சி 1 தொகுதிக்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்த எட்வின் தான் வேட்பாளர் என்று தலைமைக் கழகத்திலும் பேச்சு அடிபட்டது. அழகிரியும் இவரைத்தான் சிபாரிசு செய்தார். ஆனால்...

லால்குடி வேண்டாம் என்று திருச்சிக்கு வந்த நேரு, தொடர்ந்து திமுக வென்றுவரும் திருச்சி 2 தொகுதியை குறிவைத்தார். ஆனால், அந்தத் தொகுதியில் அன்பில் பெரியசாமியை நிறுத்த தலைமை முடிவு செய்திருந்தது. அப்படி இருந்தும் நேரு பிரஷர் கொடுத்தார். அதனால் பெரியசாமியை விட்டுவிட முடியாமல் அவரை திருச்சி 1 ல் நிற்கச் சொன்னார்கள். அதனால் எட்வினுக்கு நெருங்கி வந்திருந்த அதிர்ஷ்டம் அப்போதும் எட்டிப்போனது.

எட்வின் ஜெயக்குமார்

அந்த சமயத்தில் கருணாநிதியே எட்வினை சமாதானப்படுத்தியதாகச் சொல்வார்கள். சமாதானப்படுத்தியதோடு மட்டுமல்லாது, 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடனேயே திருச்சி மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞராக எட்வின் ஜெயக்குமாரை நியமிக்க வைத்தார். அந்த காலகட்டத்தில் எட்வின் ஜெயக்குமாரின் வளர்ச்சியும், தலைமையுடனான நெருக்கமும் நேருவையே பிரமிப்புக்கு உள்ளாக்கியது. இவரும் அவரை அழைப்பதில்லை, அவரும் போவதில்லை என்ற நிலைக்குப் போனது உறவு.

நேருவுக்கு முன்பே அரசியலுக்கு வந்து, திருச்சி மாவட்டத்தில் அன்பிலார் தொடங்கி 6 மாவட்ட செயலாளர்களை பார்த்த அனுபவம் கொண்டவர் என்பதால் மதிமுகவில் இருந்து திரும்பி வந்த என். செல்வராஜ் இவரை அரவணைத்துக் கொண்டார். அவருக்கு அரசியல் செய்வதற்கு மிகப்பெரிய உறுதுணையாக எட்வின் இருந்தார்.

2011 தேர்தலில் வழக்கம்போல் திருச்சி 1 தொகுதிக்கு கட்சியில் விருப்பமனு கொடுத்த எட்வின், அப்படியே திருச்சி 2 தொகுதிக்கும் பணம் கட்டினார். அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் ‘திருச்சி 2’ என்று அழைக்கப்பட்டபோது, நேரு மட்டும்தான், வேறு யார் பணம் கட்டி இருக்கப்போகிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அங்கு போய் நின்றார் எட்வின். அது திருச்சி திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேருவை எதிர்த்தே பணம் கட்டியிருக்காரா? என்ற ஆச்சரியக் கேள்விகள் எழுந்தன. ஆனால் அந்த தேர்தலிலும் எட்வினுக்கு சீட் வழங்கப்படவில்லை.

இப்படி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததால் 2014 மக்களவை தேர்தலுக்குள் எதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்த எட்வின் ஜெயக்குமாருக்கு அதற்கான ஆஃபர் அதிமுக முகாமிலிருந்து வந்தது. எட்வினைத் தொடர்புகொண்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அவரை சென்னைக்கு வருமாறு அழைத்தார். ‘சாணக்கிய நீதி’ என்ற ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு போய் கொடுத்து ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்தார் எட்வின். “எதற்கும் கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன்” என்று ஆறுதல் சொன்னார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக திருச்சிக்கு வந்த ஜெயலலிதா, எட்வின் ஜெயக்குமாரை மேடையேற்றி தனக்கு அருகே நிற்கவைத்து முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை அதிமுகவில் விசுவாசமாக இருந்து வருகிறார் எட்வின். ஆனால், ஜெயலலிதாவால் அழைத்துவரப்பட்டவர் என்பதால் அவரது மறைவுக்குப் பின் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தவர்கள் இவரை கண்டுகொள்ள வில்லை. இருந்தாலும் அதிமுகவில் அமைதியாக காலத்தை கழித்து வருகிறார் எட்வின்.

தன்னை எதிர்த்து அரசியல் செய்திருந்தாலும், அதிமுகவுக்கே போய்விட்டாலும்கூட எட்வினை பற்றி யார் கேட்டாலும், ’’ரொம்ப நல்லவர், தெய்வ நம்பிக்கை உள்ளவருப்பா” என்றுதான் நேரு இப்போதும் சொல்கிறார். ”என் கூடவே இருந்துருப்பா, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்” என்றுதான் நேரு சொன்னார். ஆனால் தனக்கான அங்கீகாரத்தை கட்சியில் பெற்றுத்தரவில்லை என்பதால் நேருவின் நட்பையும், திமுகவின் உறவையும் எட்வின் ஜெயக்குமாரால் தொடர முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE