மேகேதாட்டு பிரச்சினையில் மத்திய அரசு நீதி வழங்காது

By கவிதா குமார்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், மேகேதாட்டு அணை சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ' மேகேதாட்டு அணைப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டை திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சியாகும். இந்த வஞ்சக வலையில் நாம் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக்கூடாது' என்று அவர் கூறியுள்ளார்.

'கடந்த காலத்தில் காவிரியின் துணை ஆறுகளான கபினி, ஏமாவதி, ஏரங்கி முதலியவற்றில் அணைகளைக் கட்டும் பிரச்சினையில் பேச்சுவார்த்தை என்ற பெயரால் காலத்தைக் கடத்தி அதற்கிடையில் இந்த மூன்று ஆறுகளிலும் அணைகளை கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்' என்று கூறியுள்ள அவர், ' இப்போதும் அதே தந்திர வலை விரிக்கப்படுகிறது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. எனவே, கர்நாடகத்தில் உள்ள தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அக்கட்சி முயற்சி செய்கிறது' என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

'எனவே, ஒருபோதும் மேகேதாட்டு திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு நீதி வழங்காது. எனவே,காவிரிப் பிரச்சினை குறித்து கர்நாடகத்துடன் எத்தகைய பேச்சுவார்த்தையையும் நடத்தக்கூடாது' என்று தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE