புதுச்சேரிக்கு நீட் விலக்கு: தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் திமுக மனு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இயற்றி, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, சம்பத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, மற்றும் நிர்வாகிகள் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவின் விவரம்: நீட் தேர்வில் உள்ள ஆபத்துக்களை முதன் முதலில் உணர்ந்து, முதலில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதில் ஏற்படும் தாக்கங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை அமைத்தார். அக்குழு வழங்கிய அறிக்கையை 7 மொழிகளில் வெளியிட்டார். மேலும் நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றை தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது ஏற்புடையதல்ல என்று எங்கள் ஸ்டாலின் வழியில் நாங்களும் புதுச்சேரி சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு கோரி தீர்மானம் இயற்ற தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், அரசு அதற்கு முன்வரவில்லை.

பழைய கல்விக் கொள்கையைத்தான் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். கண்டிப்பாக மாற வேண்டும். ஆனால், நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், மாணவர்களின் நலனுக்கானதாக கல்விக்கொள்கை இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதனடிப்படையில் தான் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, நீண்ட காலதாமதத்துக்கு பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறது.

இதனிடையே, நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும்.

ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக் கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது எனக் கூறியதுடன், நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகவே முதல்வர், மாணவர் சமுதாயம் எழுச்சி பெற புதுச்சேரி மாநிலத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இயற்றி, அதனை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE