கால்நடைகள் வளர்க்க ஆண்டுதோறும் உரிமம் பெறும் நடைமுறை: கருத்துக் கேட்கும் மதுரை மாநகராட்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கால்நடைகள் வளர்க்க ஆண்டுதோறும் உரிமம் பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படும் நிலையில் அது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்க கால்நடை உரிமையாளர்கள், பொதுமக்களை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாலை மற்றும் பொது இடங்களில் மாடுகள், கன்றுகள், ஆடுகள், பன்றிகள், கழுதைகள், குதிரைகள் போன்ற கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முக்கிய சாலைகளில் விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள், சாலைகளை துரிதமாக கடந்து செல்ல முடியவில்லை. அதனால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு ரூ.3,000, கன்றுகளுக்கு, ரூ.1,500 அபராதம் விதிக்கப்படுகின்றன.

மேலும், நாள் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் விதித்தும் தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பொது ஏலத்தில் விற்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், கால்நடைகளை வளர்ப்பை முறைப்படுத்த மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் கால்நடைகள் வளர்க்கும் உரிமையாளர்கள் ஆண்டுதோறும் உரிமம் பெற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாடுகளுக்கு ரூ.100, கன்றுகளுக்கு ரூ.50, குதிரைகளுக்கு ரூ.150, நாய்களுக்கு ரூ.100, பன்றிகளுக்கு ரூ.100 உரிமம் பெற்று அதன் உரிமையாளர்கள் வளர்க்கலாம் என மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கால்நடை வளர்ப்போர் இந்த அனுமதியை பெற மதுரை மாநகராட்சியின் வலைதளத்தில் https://shorturl.at/nme9M (சேவைகள்) தலைப்பில் தேவையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு துணை விதிகள் தொடர்பான ஆட்சேபனை மற்றும் கருத்துகள் ஏதேனும் இருந்தால் அடுத்த 15 தினங்களுக்குள் கடிதம் மூலமாகவோ அல்லது நேரிலோ மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்குமாறும், கால் நடை வளர்ப்புக்கான நிபந்தனைகளை பட்டியலிட்டு மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE