"காங்கிரசுக்கு மாற்றான ஓர் அணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவாரா என்று அமித்ஷா கேலி செய்தார். அவர் அப்படிச் சொன்ன மறுமாதமே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸையும் உள்ளடக்கிய ஓர் அணியைத் திரட்டிக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்" என்று இறுமாப்பு கொள்கிறார்கள் உடன்பிறப்புகள்.
ஸ்டாலினின் 'உங்களின் ஒருவன்' புத்தக வெளியீட்டிற்காக இப்படியொரு அணி திரட்டல் நடந்ததா... அல்லது அணி திரட்டலுக்காகவே இப்படியொரு புத்தகம் வெளியிடப்பட்டதா? என்றொரு கேள்வி இருந்தாலும், முரசொலி மாறன் காலத்தில் அகில இந்திய அரசியலில் எப்படி நுட்பமாக திமுக காய் நகர்த்துமோ அப்படியொரு நகர்வு மீண்டும் நடந்திருக்கிறது என்று மெச்சுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
விழாவில் டி.ஆர்.பாலுவின் பேச்சு மிகத் துல்லியமாக இந்த விழாவின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டியது. "வெறும் 37 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, மக்களவையில் 303 இடங்களைப் பிடித்திருக்கிறது. அவர்களை வெற்றிபெறச் செய்தது யார்? நாம்தான். நேரில் பார்க்கும்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்கிறோம். வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடுகிறோம். ஆனால், தேர்தல் என்று வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் தனித்தனித்தனியாக பிரிந்து போய்விடுகிறோம். இப்படிப் பிரிந்து போவதால்தான், நாட்டில் பெரிதாக மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. இனிமேலாவது நாம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது மதவெறி ஆட்டத்தை இந்தத் தடவையோடு முடித்து வைக்க வேண்டும்" என்றார் டி.ஆர்.பாலு.
துரைமுருகனும் கூட அதையொட்டியே பேசினார். ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் பேச்சும் இதை ஒட்டியே இருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் "வகுப்புவாத சக்திகளை ஒழிக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.
மு.க.ஸ்டாலின் தனது ஏற்புரையில், "திமுகவின் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கம் இப்போது இந்தியாவின் முழக்கமாக மாறிவிட்டது. பிரிவினை சக்திகளால் நமது இந்திய ஒன்றியம் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. எனவே, இதனை வீழ்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் கொள்கைகளைக் காத்திட அணி திரள்வோம்" என்றார்.
குறைகள் என்ன?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டாரோ, அதைவிடச் சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், சில குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.
இன்று ஸ்டாலினை ஒரு வெற்றியாளராக்கி, அவரது சித்தாந்தத்தை வலுவாக்கி, இன்று அகில இந்திய தலைவர்களையே அழைத்து ஆலோசனை சொல்கிற இடத்துக்கு நகர்த்தியதில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்குண்டு. அவர்களுக்கு மேடையில் இடம் தந்திருக்க வேண்டும். கூட்டணிக்குள் தனக்கு சில சங்கடங்கள் இருந்தாலும் இந்தக் கூட்டணி குலைந்துவிடக் கூடாது என்பதற்காக அதையெல்லாம் பொருத்துக் கொண்டு மேடை கண்ட இடமெல்லாம் ஸ்டாலின் அருமை பெருமைகளை பேசிவரும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனையாவது மேடையேற்றியிருக்க வேண்டும். அது நடக்காமல் போனதில் வருத்தத்தில் இருக்கும் சிறுத்தைகள், "வைரமுத்து, சத்யராஜூக்கு இந்த மேடையில் அமர்வதற்குத் தகுதியிருக்கும்போது, திருமாவளவனுக்குத் தகுதியில்லையா? அவருக்கு அகில இந்திய அரசியல் தெரியாதா, மோடியை எதிர்ப்பதில் அவரிடம் தீரம் இல்லையா? அல்லது மேடைப்பேச்சுத்தான் வராதா? என்று நியாயம் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது
இதேபோல் காங்கிரஸ் சார்பில் குறைந்த பட்சம் ப.சிதம்பரத்தையோ, கே.எஸ்.அழகிரியையோ மேடையேற்றி யிருக்கலாமே? என்ற ஆதங்கம் காங்கிரஸ் கட்சியினரிடம் இருக்கிறது. இப்படி ஆதங்கப்படுபவர்கள் அதற்கான பதிலையும் அவர்களே சொல்கிறார்கள்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு என்பது நேரு குடும்பத்தின் மீதான மதிப்பும், மரியாதையும்தானே ஒழிய, இன்றைய, முந்தைய மாநில தலைவர்களின் திறமை சார்ந்தது அல்ல. இது காங்கிரஸாருக்கும் தெரியும்; திமுகவுக்கும் தெரியும். பிறகெப்படி மேடையேற்றுவார்கள்? நேற்று அரசியலுக்கு வந்த பாஜகவின் அண்ணாமலைக்கே பதிலடி கொடுக்கக்கூட முடியாத இவர்களுக்கு எப்படி திமுக மரியாதை செய்யும்? அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் அந்தக் கட்சி அவமரியாதை செய்யவில்லை. தனிமனிதராக ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தவறாமல் கொடுக்கிறது. ஆனால், ஓர் பேரியக்கத்தின் மதிப்புக்குரிய நிர்வாகியாக அவர்களைப் பார்ப்பதே இல்லை. ராகுல்தான் பிரதமர் என்று சொல்லிவிட்டு, இவர்களைக் கீழே தள்ளிவிடுகிறார்கள்" என்கிறார் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர்.
வட இந்திய ஊடகங்கள் இந்த நிகழ்வை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை. இதுகுறித்து டெல்லி பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "அந்த விழாவில் ராகுல் காந்தியும், பினராயி விஜயனும் கைகோத்து ஒரு போஸ் கொடுத்திருந்தால் போதும், ஒட்டுமொத்த ஊடகங்களும் திரும்பிப் பார்த்திருக்கும். பினராயி விஜயன் விலகியே நின்றார். பாராளுமன்றத்தில் மோடியை ஓடிப்போய் கட்டிப்பிடித்து பாசத்தைப் பொழிந்த ராகுலாவது பினராயியை இழுத்தணைத்து இருக்கலாம். அவரும் விலகியே நின்றுவிட்டார். ஒரு விழாவில் சம்பிரதாயமாகக்கூட கரம்கோக்காதவர்கள் எப்படி ஓரணியில் திரள்வார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழாதா?" என்றார்.
எதிர்வினை என்ன?
பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சிவசேனா ராஜ்தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று பலரும் விரும்புகிறார்கள். இவர்களுக்கிடையே ஒற்றுமையும் இருக்கிறது. ஆனால், காங்கிரஸையும் அந்த அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக, சிவசேனாவைத் தவிர மற்ற கட்சிகளுக்கு பெரிய விருப்பமில்லை. மம்தா பிரதமர் கனவுடனே வலம்வருகிறார். இந்தப் பின்னணியில் ஸ்டாலின் நடத்திய விழா சொல்கிற செய்தி ஒன்றுதான். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
"தமிழ்நாட்டில் திமுகவும் சரி, அதன் கூட்டணிக் கட்சிகளும் சரி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததால்தான் இந்தக் கூட்டணி இன்னும் தொடர்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலக் கட்சிகளுக்கு கூடுதல் மரியாதை என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்தியிருந்தாலே, அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருக்கும். சில மாநிலத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வது போல திமுக செய்யாமல் இருப்பதற்குக் காரணம், டெல்லி அரசியலில் அதற்கு உள்ள அனுபவமும், ஆழ்ந்த ஞானமும்தான் காரணம்.
ஆயிரம் இருந்தாலும் காங்கிரஸ் ஓர் தேசியக் கட்சி. பாஜக இல்லாத மாநிலம் கூட இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் முகம் இல்லாத மாநிலமே இல்லை. காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்றாலும்கூட, அது உறுதியாகவும், தொடர்ந்தும் நடைபெற்றதில்லை என்பதே வரலாறு. அதை உணர்ந்ததால்தான் காங்கிரஸ் உள்ளடங்கிய கூட்டணியை திமுக வலியுறுத்துகிறது; முன்னிறுத்துகிறது" என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா.
'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்றாலும், அங்கே பேச வேண்டியதை மறுநாள் சென்னை வேளச்சேரியில் நடந்த ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசினார் அவர். "இந்தியாவிலே பாஜவினரால் தொட முடியாத மண்ணாக, அவர்களால் வாலாட்ட முடியாத நிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றால், பாதுகாப்பு அரணாக இங்கே திமுக இருப்பதுதான் முக்கியமான காரணம். அதனால்தான், எந்த நெருடலும் இல்லாமல் காங்கிரசும் இந்தக் கூட்டணியில் இருக்கிறது, இடதுசாரிகளும் இந்த கூட்டணியில் இருக்கின்றன. திருமாவளவனும் இந்தக் கூட்டணியில் இடம்பெற முடிகிறது. நம்மை இணைப்பது சமூகநீதி என்கிற கருத்தியல்தான்.
அடுத்து வரக்கூடிய 2024 தேர்தலில் சனாதன சக்திகளை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்க வேண்டும். அகில இந்திய அளவில் அதற்கான முன்முயற்சிகளை எடுக்கிற வலிமை எப்படி முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இருந்ததோ அதைப்போல அதைவிட பன்மடங்கு ஆற்றல் ஸ்டாலின் அவர்களிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கையோடு அவருக்குத் துணையாக இந்தக்களத்தில் நிற்கிறோம்" என்றார் திருமா.
எல்லாம் சரி. இந்த அணி திரட்டலை பாஜக எப்படிப் பார்க்கிறது என்று அதன் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழா அகில இந்திய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியே இல்லை. அந்த வெற்றிடத்தை தாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மம்தா, சரத் பவார், சந்திரசேகர ராவ் போலவே ஸ்டாலினும் நினைக்கிறார். அதாவது, காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அரசியலில் கொஞ்ச நஞ்சம் இருக்கிற மரியாதையையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று இவர்களெல்லாம் நினைக்கிறார்கள். நாங்கள் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொன்னதைக் கண்டித்தவர்கள், இப்போது அதே வேலையைத்தான் செய்கிறார்கள். ஒன்று சேர்கிறோம் என்ற பெயரில் இவர்கள் நடத்துகிற கூத்துக்கள் எல்லாம் பாஜகவை மேலும் மேலும் வலுப்படுத்தும், வளர்த்தெடுக்குமே தவிர எந்தப் பாதகத்தையும் ஏற்படுத்திவிடாது" என்றார்.
மலைச்சரிவில் ஓடும் பிரேக் இல்லாத கார் போல எல்லாவற்றிலும் வேகம் காட்டுகிறது பாஜக ஆட்சி. அந்த வேகத்துக்கு முட்டுக்கட்டைப் போடவாவது நாம் ஒன்று திரள வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் எல்லாம் உணர்ந்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். பார்க்கலாம்!