திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேயர், துணை மேயர் பதவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சி, பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை ருசித்தது. 21 மாநகராட்சியை கைப்பற்றியுள்ள திமுக கூட்டணி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் பெரும் பெற்றியை பெற்றுள்ளது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை வழங்க நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட நேரமாக நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. இந்நிலையில் இடதுசாரி கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும், கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிகளும், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை ஆகிய பேரூராட்சி துணைத் தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும், கூத்தைப்பார், ஊத்துக்குளி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.